புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள உருவம்பட்டி ஊராட்சி
ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், இன்று பொங்கல் வாழ்த்து அட்டை தயாரிக்கும்
போட்டிக்கு மாணவர்களைத் தயார்செய்யும் தகுதிப்போட்டி நடைபெற்றது. படு
உற்சாகமாகக் கலந்துகொண்ட 54 மாணவ, மாணவிகளும் தங்களது ஓவியத் திறமையை
வெளிப்படுத்தி அசத்தினர்.
'அரசு தொடக்கப்பள்ளி நடத்திய சமத்துவப் பொங்கல் விழா' என்ற தலைப்பில்,
கடந்த 12.01.2018ல் விகடன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில்,
ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் வேட்டி, புடவை அணிந்து வந்து
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய அழகை விவரித்திருந்தோம். அதில் ஈர்க்கப்பட்ட
சென்னை 'சிறுதுளி' அமைப்பினர், பள்ளியின் ஆசிரியர் முனியசாமியைத்
தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது, "உங்கள் பள்ளி மாணவ,
மாணவிகளுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறோம். உங்கள் பள்ளிப் பிள்ளைகளின்
திறனை வெளிப்படுத்தும் போட்டி ஒன்றை நடத்தி, எங்களுக்கு அனுப்புங்கள்"
என்று கூறியிருக்கிறார்கள்.
சென்னை 'சிறுதுளி 'அமைப்பு, அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்
விதமாக, பொங்கல் வாழ்த்து அட்டைகளை அஞ்சல் அட்டைகளில் வரையவைத்து, இந்திய
தபால்துறைமூலம் அனுப்பும் போட்டியை நடத்திவருகிறது. அதையே இவர்களுக்கும்
நடத்துவதென முடிவுசெய்த தலைமை ஆசிரியை சாந்தியும், ஆசிரியர் முனியசாமியும்
இன்று அந்த தகுதிப் போட்டியை நடத்திமுடித்து, அத்தனை அட்டைகளையும்
'சிறுதுளி' அமைப்புக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தி கூறும்போது, "தமிழ்நாட்டில்
எங்கோ ஒரு மூலையில் அடையாளமின்றி இருந்த எங்கள் பள்ளியை விகடன்தான்
அடையாளப்படுத்தியது. எங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் சிலரின்
அப்பாக்கள், வெளிநாட்டில் வேலைபார்க்கிறார்கள். அவர்கள், விகடனில் புடவை
கட்டிக்கொண்டும், வேட்டி அணிந்துகொண்டும் தங்கள் பிள்ளைகள் இருக்கும்
படங்களைப் பார்த்துவிட்டு பூரித்துவிட்டார்கள். எங்களிடம் போனில் பேசி,
சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். எங்கள் பள்ளியையும், படிக்கும்
பிள்ளைகளையும் பற்றி செய்தி வெளியிட்ட விகடனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்"
என்று பூரிக்கும் குரலில் சொல்லி முடித்தார் சாந்தி.
இப்போட்டியை ஒருங்கிணைத்த ஆசிரியர் முனியசாமி பேசுகையில்," எங்கள்
பள்ளியில் மொத்தமே 54 மாணவ, மாணவிகள்தான் படிக்கிறார்கள். அத்தனைபேரும்
இந்த தகுதிச்சுற்றில்
கலந்துகொண்டார்கள். இதுபோன்ற போட்டியில் கலந்துகொள்வதால், தங்களது
படைப்பாற்றல் திறனை பிள்ளைகள் வளர்த்துக்கொள்ளமுடிகிறது. குழந்தைகளின்
கற்பனைக்கு முழுச் சுதந்திரம் கிடைப்பதால், அவர்களின் படைப்பாற்றல் திறன்
தானாகவே வளர்கிறது. யாருக்கெல்லாம் வாழ்த்து அட்டை அனுப்புவது,
எதற்கெல்லாம் வாழ்த்து அட்டை அனுப்ப வேண்டும் என்ற விஷயத்தையும், அதனால்
கிடைக்கும் பாசிட்டிவ் எண்ணங்கள்குறித்தும் இந்தச் சிறு வயதிலேயே
அனுபவமாகப் புரிந்துகொள்கின்றனர்.
பிறந்தநாள், பொங்கல், ஆண்டுப் பிறப்பு போன்ற சிறப்பு நாள்களில் வாழ்த்து
அட்டைகளைப் பரிமாறிக் கொள்வதன்மூலம் நம் அன்பை மற்றவர்களுக்குத்
தெரிவிக்கலாம். என்பதையும் தெரிந்துகொள்கின்றனர். போட்டியில் கலந்துகொண்ட
மாணவ, மாணவிகள் பெரும்பாலும் இருபுறமும் செங்கரும்புகள் நிற்க நடுவிலே
பொங்கல் பானையுடன் மாடுகள் இருக்கும் வாழ்த்து அட்டையைத் தயாரித்தனர். இந்த
நிகழ்ச்சி, மற்றவர்கள் பார்வைக்கு ரொம்பச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால்,
எங்கள் பிள்ளைகளைப் பொறுத்தவரை இது ஒரு திருவிழா' என்றார் மகிழ்ச்சி
தெறிக்கும் குரலில்.
ஆசிரியர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete