குடியரசு தினம் என்றால் என்ன? அந்தப் பதிலைச் சொல்லப் பெரியவர்களே கொஞ்சம்
கஷ்டப்படுவார்கள். அது சரி, ஏன் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்?
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவை ஆண்டது யார்? உங்கள்
பாடப்புத்தங்களில் படித்திருப்பீர்களே, மன்னர்கள்தான் ஆட்சி செய்து
வந்தார்கள். இப்போது இருப்பது போல அப்போது மாநிலங்கள் எல்லாம் கிடையாது.
சிறிய அரசர்கள், பெரிய அரசர்கள், பேரரசர்கள் எனத் தங்கள் எல்லையைப்
பொறுத்து ஆட்சி செய்தார்கள். இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை.
எல்லாருமே இந்தியாவைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி
செய்துவந்தார்கள். இப்படிப் பிரிந்து கிடந்ததாலும், ஒற்றுமை இல்லாததாலும்
ஆங்கிலேயர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். தந்திரமாக மன்னர்களிடம்
பேசி நம் நாட்டுக்குள்ளே நுழைந்து பின்னர் நம்மை அடிமைப்படுத்தினார்கள்.
அது மட்டுமல்ல, மன்னர்கள் ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம். மக்கள்
சுயமாகச் சிந்திக்க முடியாது; சுதந்திரம் பற்றி நினைக்கவும் முடியாது.
மன்னர் இறந்துபோனால், உடனே அவருடைய மகன் மன்னராகிவிடுவார். இதைத்தான்
முடியாட்சி அல்லது மன்னராட்சி என்று சொல்லுவார்கள்.
ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி
மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும்
அவ்வழியே என்று இருந்தார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் வரக் கூடாது
என்று சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் நினைத்தார்கள். வாரிசு உரிமை
உள்ள மன்னராட்சி முறை கூடாது என்று நினைத்தார்கள். மக்கள் பங்கு கொள்ளும்
மக்களாட்சி உள்ள நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.
அதற்கு நாடு குடியரசாக இருப்பது அவசியம் என்றும் முடிவு செய்தார்கள்.
குடியரசு என்றால் குடிமக்களின் அரசு என்று பொருள். அதாவது மக்களாட்சி என்று
அர்த்தம். மக்கள் தங்கள் விருப்பப்படி தேர்தல் மூலம் தங்களுடைய தலைவரைத்
தேர்ந்தெடுக்கலாம். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி நடத்தும்
நாடுதான் குடியரசு நாடு. இப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான்
இந்தியாவும் குடியரசு நாடானது.
ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது என்று
பாடப் புத்தங்களில் படித்திருப்பீர்கள் அல்லவா? அரசியல் அமைப்புச் சட்டம்
என்றால் என்ன தெரியுமா? நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி
ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம்.
டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்ட மேதைகள் பலர் சேர்ந்து இதை
உருவாக்கினார்கள். இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று
ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக்
கொண்டாடுகிறோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...