ஆளுநர் உரை மீதான விவாதத்தில் சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி வியாழக்கிழமை பேசியது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காதவராக
இருந்தார். ஆனால், தற்போதைய அரசு அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாஜக
அரசு புறக்கணித்து வருகிறது. அது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. நீட்
தேர்வை ரத்து செய்யும்
முயற்சி முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
வெள்ளப்பெருக்கு, வர்தா புயல், வறட்சி நிவாரணம், ஒக்கி புயல்
போன்றவைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு கோரிய நிதிகளைக்
கேட்டுப் பெற முடியாத நிலை உள்ளது என்றார்.
அப்போது அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டு கூறியது:
ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு
வரப்பட்ட திட்டங்கள். காங்கிரஸ் ஆட்சியில் தமிழக அரசு சார்பில் நிவாரணம்
கேட்கப்பட்டது. அந்த நிதியையெல்லாம் முழுமையாக காங்கிரஸ் கொடுத்துவிட்டதா?
என்றார்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: நீட் தேர்வுக்காக உச்சநீதிமன்றம் வரை
சென்று போராடினோம். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே தமிழகத்துக்கு
நீட் தேர்வில் விலக்கு கொடுக்கலாம் என்று கூறும் நிலையும் ஏற்பட்டது.
இரண்டு மத்திய அமைச்சர்களிடமும் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க சாதகமான
பதில் பெறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய
அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி தொடுத்த வழக்கின் காரணமாகத்தான்
தமிழகத்துக்குப் பாதகமான தீர்ப்புக் கிடைத்தது.
கே.ஆர்.ராமசாமி: நீட் தேர்வில் விலக்கு பெற்றுவிடுவோம் என்று மாணவர்களுக்கு இறுதி வரை நம்பிக்கை அளித்தீர்களா இல்லையா?
அமைச்சர் விஜயபாஸ்கர்: தமிழகத்துக்குச் சாதகமான முடிவு வந்துகொண்டிருந்த
நிலையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி தொடுத்த வழக்கின்
காரணமாகத்தான் தீர்ப்பு மாறியது. அதனால், இந்த விவகாரம் குறித்துப்
பேசுவதற்கு காங்கிரஸுக்கு தார்மிக உரிமை இல்லை.
கே.ஆர்.ராமசாமி: மாணவர்களைத் தேர்வுக்குத் தயாராகச் சொன்னது இந்த அரசுதான். அனிதா மரணத்துக்கு என்ன பதில்?
அமைச்சர் சி.வி.சண்முகம்: உச்சநீதிமன்றத்தில் கடைசி வரை போராடினோம்.
நீதிமன்றத்துக்குச் செல்லும் முன்னே தோற்றுவிடுவோம் என்றா சொல்ல முடியும்?
இப்போதும் சொல்கிறோம். நீட் தேர்வு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
அதன் இறுதித் தீர்ப்பில் நிச்சயம் வெற்றிபெறுவோம்.
கே.ஆர்.ராமசாமி: தனிப்பட்ட முறையில் யாரைப் பற்றியும் பேசக்கூடாது.
முன்னாள் முதல்வர் குறித்தும் என்னாலும் பேச முடியும். வீம்பாகப் பேசுவது
விபரீதமாகத்தான் இருக்கும்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: காவிரி விவகாரம், முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு
விவகாரம் என தமிழக உரிமைகள் பறிபோவதற்கு காங்கிரஸ் அரசுதான் காரணம்.
தமிழகத்துக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்பதை பட்டியலிட்டுச் சொல்ல
வேண்டும்.
கே.ஆர்.ராமசாமி: இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்ததே காங்கிரஸ்தான். அதனால்தான், நீங்கள் எல்லோரும் அமைச்சர்களாக உள்ளீர்கள்.
அமைச்சர் டி.ஜெயக்குமார்: சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸைக் கலைத்துவிட
வேண்டும் என்று காந்தி கூறியதையும் நினைவூட்டுகிறேன் என்றார். இவ்வாறு
விவாதம் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...