பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவருக்கு
வாத்துபோல் நடக்கும் தண்டனை வழங்கியதால் அந்த மாணவர் இறந்ததாகவும்,
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினர்கள்,
நண்பர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
10-ம் வகுப்பு மாணவர் சாவு
சென்னை பெரம்பூரை அடுத்த திரு.வி.க.நகர்
17-வது தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவர், அம்பத்தூரில் எலக்ட்ரிக்கல் கடை
நடத்தி வருகிறார். இவருடைய மகன் நரேந்தர்(வயது 15). இவர், திரு.வி.க.நகர்
பல்லவன் சாலையில் உள்ள டான்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு
படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்ற
நரேந்தர், இறை வணக்கம் முடிந்து வகுப்பறைக்கு திரும்பிய சிறிது நேரத்தில்
மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சென்னை வடக்கு மாவட்ட கல்வி அதிகாரி பசுபதி
மற்றும் முதன்மை கல்வி அதிகாரி மனோகரன் ஆகியோர் பள்ளிக்கு சென்று முதல்வர்
அருள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
வகுப்பறையில் அமர்ந்து இருந்த மாணவர்
நரேந்தர், திடீரென மயங்கி விழுந்த தாகவும், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு
சென்றபோது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவர் இறந்து விட்டதாக
தெரிவித்ததாகவும் பள்ளி நிர்வாகம் சார்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது. அதை
ஏற்று மாணவரின் உடலை பெற்றோர் வாங்கிச்சென்று விட்டனர்.
மாணவர்களுக்கு தண்டனை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் சக மாணவர்கள் நரேந்தரின் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது அவர்கள், பள்ளிக்கு தாமதமாக வந்த 12
மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங், வாத்துபோல் நடக்கும்படி
தண்டனை வழங்கினார். அதன்படி மாணவர்கள் தங்கள் கைகளை கட்டிக்கொண்டு முட்டி
போட்டு வாத்துபோல நடந்து மைதானத்தை சுற்றி வந்தனர். இதனால் 3 பேர் மயங்கி
விழுந்தனர். அதில் 2 பேருக்கு உடனடியாக மயக்கம் தெளிந்து விட்டது. நரேந்தர்
மட்டும் மயக்கம் தெளியாமல் இருந்ததால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் என நரேந்தரின்
பெற்றோரிடம் கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த நரேந்தரின்
பெற்றோரும், உறவினர்களும் நேற்று முன்தினம் இரவு திரு.வி.க.நகர் போலீஸ்
நிலையத்தை முற்றுகையிட்டனர். மாணவர் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இதையடுத்து புளியந்தோப்பு துணை கமிஷனர்
சியாமளாதேவி, செம்பியம் உதவி கமிஷனர் அர்னால்டு ஈஸ்டர், திரு.வி.க.நகர்
போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் ஆகியோர் பள்ளிக்கு சென்று அங்குள்ள
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்
தண்டனை வழங்கிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் மாணவர்கள் முதலில்
மைதானத்தை சுற்றி ஓடி வருகிறார்கள். பின்னர் தங்கள் கைகளை கட்டிக்கொண்டு
முட்டி போட்டு வாத்துபோல நடந்து மைதானத்தை சுற்றி வரும் காட்சிகள் பதிவாகி
இருந்தது.
மைதானத்தை சுற்றி ஓடி வந்ததால் மாணவர்
நரேந்தருக்கு மூச்சு வாங்கியது. அதோடு வாத்து போல் நடக்க செய்ததால் அவர்
மயங்கி விழுந்து இறந்து இருப்பது தெரியவந்தது.
சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று காலை நரேந்தரின்
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர்
திரு.வி.க.நகர் பஸ்நிலையம் முன்பு ஒன்று திரண்டனர். அவர்கள் மாணவர்
நரேந்தரின் கண்ணீர் அஞ்சலி பேனருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வரை
கைது செய்யவேண்டும் என்று கோஷமிட்டனர். போராட்டம் நடந்து கொண்டிருந்த போதே
நரேந்தரின் உறவினர்கள் 2 பேர் மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு
ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் எம்.கே.பி.நகர்
போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து
சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி
தலைமை ஆசிரியர், உடற் கல்வி ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று கூறி
போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
2 பேர் கைது
இதையடுத்து போலீசார் மீண்டும் பள்ளிக்கு சென்று அங்கு இருந்த ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் பள்ளியின் முதல்வர் அருள்(51),
உடற்கல்வி ஆசிரியரான மாதவரம் அடுத்த பொன்னியம்மன் மேடு கற்பகம் நகரைச்
சேர்ந்த ஜெய்சிங்(38) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களை விசாரணைக் காக பெரவள்ளூர் போலீஸ்
நிலையத்துக்கு அழைத்துச்சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும்
பள்ளி தாளாளர் கிளமண்ட் என்பவரிடம் இதுபற்றி போலீசார் விசாரித்து
வருகின்றனர்.
பணி இடைநீக்கம்
இதற்கிடையே உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங்கை
பள்ளி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்து உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்,
உடற்கல்வி ஆசிரியர் கைதான தகவல் அறிந்ததும் சாலை மறியலை கைவிட்டு அனைவரும்
கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக நேற்று டான்போஸ்கோ பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
இதற்கிடையில் மாணவர் நரேந்தர் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...