உதவி
பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படும் என,
யு.ஜி.சி., அறிவித்துள்ளது. முதுநிலை படிப்பு முடித்தோர், கல்லுாரிகளில்
உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதி தேர்வில்,
தேர்ச்சி பெற வேண்டும். கல்லுாரி மற்றும் பல்கலைகளில் படிக்கும், இளநிலை
ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறவும், நெட் தேர்வில் தேர்ச்சி
பெறுவது கட்டாயம்.
ஆண்டுக்கு ஒரு முறை, நெட் தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் இந்த தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. நடப்பாண்டில், நாடு முழுவதும், ஜூலை, 8ல், நெட் தேர்வு நடக்கும் என, யு.ஜி.சி., நேற்று அறிவித்தது. இந்த ஆண்டுக்கான தேர்வு விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு தாள்களுக்கு தலா, 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் தாளில், 50 மற்றும் இரண்டாம் தாளில், 100 வினாக்கள் இடம் பெற உள்ளன. முதல் தாளில் பொதுவான வினாக்களும், இரண்டாம் தாளில், தேர்வர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்தும், வினாக்கள் இடம் பெறுகின்றன.
தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கை, பிப்.,1ல், https://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச், 6 முதல், ஏப்., 25 வரை, 'ஆன்லைனில்' தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என, யு.ஜி.சி.,அறிவித்துள்ளது.
வயது வரம்பில் சலுகை : இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெற, நெட் தேர்வு எழுத வேண்டும். தேர்வு விதிகளின்படி, 28 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே, நெட் தேர்வில் பங்கேற்க முடியும். இந்த வயது உச்சவரம்பு, இந்த ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வரும், ஜூலையில் நடக்கும் தேர்வில், 30 வயது வரை உள்ளவர்கள், நெட் தேர்வை எழுதலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...