சென்னை: ''மாநிலம் முழுவதும், 6,029 அரசு பள்ளிகளில், 429 கோடி ரூபாய்
செலவில், உயர்தர கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், புதிய பாடத்திட்டம்,
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை காட்டிலும் சிறப்பாக இருக்கும். மாநிலம்
முழுவதும், 3,000 அரசு பள்ளிகளில், 60 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்'
வகுப்பறைகள் அமைக்கப்படும். பள்ளிகளில் கட்டமைப்பு மேம்படுத்த, மத்திய
அரசிடம், 500 கோடி ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளோம். புதிய பாடத்திட்டத்தில்,
72 தொழிற்கல்வி பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, பிளஸ் 2 முடித்த
மாணவர்களுக்கு எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும். கற்றல் குறைபாடுள்ள
மாணவர்களுக்கு, தனியார் நிறுவனத்தின் ஐந்து கோடி ரூபாய் பங்களிப்புடன்,
சிறப்பு பயிற்சிகள் தர உள்ளோம். மேலும், 6,029 பள்ளிகளில், 429 கோடி ரூபாய்
செலவில், உயர்தர, 'ஹைடெக்' கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. 20 ஆயிரம்
ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து, சிறப்பு பயிற்சி அளிக்க
திட்டமிடப்பட்டு உள்ளது.
அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களில், போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறுவோருக்கு,
ஒரு லட்சம் லேப்டாப்கள், பொது தேர்வுக்கு முன்பே வழங்கப்பட உள்ளன. தமிழக
பட்ஜெட்டில், பள்ளிக்கல்விக்கு போதுமான நிதி ஒதுக்கப்படும். மத்திய
அரசிடமிருந்து, 2,200 கோடி ரூபாய், தமிழகத்துக்கு வரவேண்டி உள்ளது; அதை பெற
முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
வடமாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், மாதம், 7,500
ரூபாய் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, நடவடிக்கை
எடுக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில், 2013 முதல் தேர்ச்சி
பெற்றவர்கள், 92 ஆயிரத்து, 620 பேர் உள்ளனர். அவர்கள் தேர்ச்சி பெற்றது
முதல், ஏழு ஆண்டுகள், அதாவது, 2020 வரை அரசு பணியில் சேர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...