நிதி மந்திரி அருண்ஜெட்லி வருகிற 1–ந் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி பட்ஜெட்டுக்கு முன்னதாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய அளவு உயர்த்தப்பட்டு உள்ளதால், இப்போது அமலில் இருக்கும் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் உயர்த்தி ரூ.3 லட்சமாக அதிகரிக்கலாம், இந்நகர்வில் 75 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோன்று வீட்டுக்கடனுக்கு வட்டி செலுத்துவதிலும் விலக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வீட்டுக் கடனாக ரூ.2 லட்சம் பெற்றவர்களுக்கும் வட்டி செலுத்துவதி்ல் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை ரூ.2.50 லட்சமாக உயர்த்துவதால் வீட்டு கடன் வாங்கிய 75 லட்சம் பேர் பயனடைவார்கள் இதில் அரசுக்கு செலவு ரூ.7,500 கோடியாவே இருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் சேமிப்புகள், வைப்புத் தொகை வைத்து இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் வரை டி.டி.எஸ்.லிருந்து விலக்கு இருக்கிறது. இந்த தொகையையும் உயர்த்தப்படலாம், பட்ஜெட்டில் விவசாயம், சிற மற்றும் குறுந்தொழில்கள், அடிப்படை கட்டமைப்பு, அனைவருக்கும் வீடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இந்திய தொழிற் கூட்டமைப்பினர் (சி.ஐ.ஐ.) தெரிவித்த தகவல்கள் வருமாறு:–
தற்போதுள்ள வருமான உச்சவரம்பு அளவான ரூ.2½ லட்சம், ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படலாம். பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது போல இந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயராது. இதுதவிர, வருமான வரி செலுத்துவதில் உள்ள அடுக்கில் (சிலாப்) மாற்றம் செய்ய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது நடுத்தர வருவாய் ஈட்டுவோருக்கு, குறிப்பாக சில்லரை விலையில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மாதச் சம்பளதாரர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக அமையும்.
கடந்த ஆண்டு வருமான வரி அடுக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரம், ரூ.2½ முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் தனி நபர்கள், சிறு அளவில் நிவாரணம் பெறும் விதமாக 10 சதவீத வருமான வரி என்பது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படலாம் (இது தற்போது 20 சதவீதம்). இதனால் மாதச் சம்பளம் பெறுவோர் பெரும் பயன் அடைவார்கள்.
இதேபோல் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் ஈட்டும் தனிநபருக்கு மட்டும் 20 சதவீத வரி விதிக்கப்படலாம் (தற்போது 30 சதவீதம்). ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுவோருக்கு மட்டுமே 30 சதவீத வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான நாடுகளில் இந்த பிரிவினருக்கு இதைவிடவும் அதிக சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.
தற்போது ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி அடுக்கு இல்லை என்பதும், மாதச் சம்பளம் பெறுவோர் ரூ.10 லட்சத்துக்கு மேலாக ஆண்டு வருமானம் ஈட்டினாலே அவர்கள் 30 சதவீத வரி செலுத்தும் அடுக்கிற்குள் சென்று விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் வருமான பிரிவுகளில் தொகையை அதிகரித்து அதன் மூலம் மாதச்சம்பளம் பெறுவோரின் வருமான வரிச்சுமையை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
அதே நேரம், தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக விதிக்கப்படும் 30 சதவீத வரியை 25 சதவீதமாக குறைக்க கோரும் இந்திய தொழிற் கூட்டமைப்பின் கோரிக்கையை கடும் நிதி பற்றாக்குறை காரணமாக மத்திய நிதி அமைச்சகம் ஏற்காது என்றே கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...