தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் 30 சதவீத மாணவர்கள்கூட சேராதபொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 142-லிருந்து 177-ஆக அதிகரித்துள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற 3,325 தனியார் பொறியியல் கல்லூரிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 526 தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.இதில், கடந்த கல்வியாண்டில் 177 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மத்திய அரசின் அந்த தகவலின்படி, தமிழகத்தில் கடந்த 2014-15-ம் கல்வியாண்டில் 140 கல்லூரிகளிலும், 2015-16-ல் 142 கல்லூரிகளிலும் 30 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த2016-17-ம் கல்வியாண் டில் 177-ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாகும். தமிழகத்துக்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தில் 169 கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர் சேர்க்கை இருந்துள்ளது.
மூட வேண்டும் :
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது: தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்ததும், தரமான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை ஏஐசிடிஇ அதிகப்படுத்தியதும் மாணவர் சேர்க்கை குறைய முக்கிய காரணங்களாகும். திறமையான ஆசிரியர்கள், சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாத தரம் குறைந்த கல்லூரிகளில்தான் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.அவ்வாறு தரம் குறைந்த கல்லூரிகள் மாணவர்களின் வாழ்க்கையை பாழாக்கி வருகின்றன. இதற்கு தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும்தான் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகளை மூட உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
திறமையான துணைவேந்தர்கள்:
கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறும்போது, “தொடக்கத்தில் வியாபார நோக்கம் இல்லாமல் இருந்த கல்வி தற்போது வணிகமயமாகி தரம் குறைந்துகொண்டே வருகிறது. அதன் ஒரு தாக்கம்தான் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவு. வேலையில்லா திண்டாட்டத்தை அனைவரும் கண்கூடாக பார்க்கின்றனர். எனவே, தரம் குறைந்த பொறியியல் கல்லூரியில் அதிக பணம் செலவழித்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோர் விரும்புவதில்லை. அவ்வாறு படிக்க வைத்தால் அது பொருளாதார இழப்பு என நினைக்கின்றனர். எங்கு கல்வியை நிர்வகிக்கும் தலைமை சரியில்லையோ அங்கு மொத்த கல்வியின் தரமும் பாதிக்கப்படும். எனவே, துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் இல்லாமல் திறமையான தொலைநோக்கு பார்வைகொண்ட துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் கல்லூரிகளின் தரம் உயரும். துணைவேந்தரே முறைகேடாக நியமிக்கப்பட்டால், அது கீழ்மட்டம் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒருகாலத்தில் பொறியியல் கல்வியில் பெயர் பெற்ற தமிழகம். கடந்த 10 ஆண்டுகளாக பின்தங்கிய நிலையை சந்தித்து வருகிறது. எனவே, பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவது காலத்தின் தேவை ஆகும்” என நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...