அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, வரும் ஜனவரி 27ஆம் தேதியன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் டெல்டா விவசாய பாசனத்திற்காக 7 டிஎம்சி காவிரி நீரைத் திறந்துவிட வேண்டுமென்று, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், அவ்வாறு செய்ய இயலாது என தெரிவித்திருந்தார் சித்தராமையா.
இன்று (ஜனவரி 17) காலை அதிமுக தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போதும், காவிரி நீர் விவகாரம் பற்றி கருத்து கூறியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியும், இதுவரை பலன் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில், தமிழகத்தின் கைவசம் இருக்கும் நீரை, விவசாயப் பாசனத்திற்காக திறந்துவிட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வரும் ஜனவரி 27ஆம் தேதியன்று காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது அனைத்து விவசாயிகள் சங்கம். தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இந்த ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிகிறது. தஞ்சாவூரில் இன்று நடந்த அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கருகும் சம்பா பயிர்களைக் காக்க காவிரியில் 15 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டுமென்றும், அதனைச் செயல்படுத்துமாறு கர்நாடக அரசை மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டுமென்றும், இந்த போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...