உங்களை ஒரு பெட்டியினுள் அடைத்து, அதை சுமார் 1,123
கிலோமீட்டர் வேகத்தில் ஒரு குழாயின் வழியாக சீறிப்பாயவிட்டால் நீங்கள்
பொதுவாக பல மணிநேரங்களில் சென்றடையும் இடத்தை இதன் மூலமாக சில நிமிடங்களில்
சென்றடைய முடியும்.
இதுதான் ஹைப்பர்லூப் என்னும் அதிநவீன போக்குவரத்து தொழில்நுட்பத்தினுடைய சாராம்சம்.
உலகின் போக்குவரத்து துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்பகட்ட ஆய்வுகள் நடக்கும் அமெரிக்காவின் நெவாடா மாகாணத்திற்கு சென்றது பிபிசி.
இந்த யோசனையை முன்வைத்தது யார்?
ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் யோசனையை முதல் முறையாக முன்வைத்தவர் உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் முன்னணி எலக்ட்ரானிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகிய இரண்டு மிகப் பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பிலுள்ள எலான் மஸ்க் ஆவார்.
மஸ்க் இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்களையும், தேவையையும் அறிவித்தபோது அமைதி காத்த பல நிறுவனங்கள் அதன் பிறகு இந்த திட்டத்தில் தீவிர ஆர்வத்தை செலுத்த ஆரம்பித்தன.
இது எப்படி செயல்படுகிறது?
காந்த விசையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் 'மாக்லெவ்' ரயில் முறையை அடிப்படையாக கொண்ட இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில், மாக்லெவ் போன்ற ரயில்கள் ஒரு குழாயினுள் செலுத்தப்பட்டு கிட்டதட்ட 1,123 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்படும்.
அதாவது, காந்த விசையை அடிப்படையாக கொண்டு செயல்படும் 'மாக்லெவ்' ரயில்கள் மணிக்கு 430 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. இது ஏற்கனவே ஷாங்காய் போன்ற இடங்களில் செயல்பாட்டில் உள்ளது.
ஏற்கனவே காந்த மிதத்தல் தொழில்நுட்பம் மூலம் அதிவேகத்தில் இயக்கப்படும் மாக்லெவ் ரயிலை ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின்படி, ஒருவித குழாயினுள் செலுத்தி இயக்கினால் கிட்டத்தட்ட ஒரு விமானம் செல்லும் வேகத்தைவிட இரண்டு மடங்கு அதிக வேகத்தில் அது செல்லும்.
இந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?
எலான் மஸ்க் இந்த ஹைப்பர்லூப் திட்டத்தை கடந்த 2013ம் ஆண்டே வெளியிட்டார். ஆனால், இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்க மற்ற நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விர்ஜின் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ரிச்சர்ட் பிரான்சன் இத்திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு அந்நிறுவனத்தின் சார்பில் முதலீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, இத்திட்டம் தற்போது 'விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன்' என்று அழைக்கப்படுகிறது.
ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதா?
ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 2021ல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இத்தொழில்நுட்பம் இன்னும் சோதனை முயற்சி அளவிலேயே உள்ளது.
அமெரிக்காவிலுள்ள நெவாடா மாகாணத்தில் லாஸ் வேகாசின் வடக்கே 40 மைல் தொலைவில் பாலைவனம் போன்ற பகுதியில் இதற்கான சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தை பார்க்கும்போதே அது மிகப் பெரிய முதலீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டம் என்பது தெரிய வருகிறது.
சோதனை முயற்சிக்காக 500 மீட்டர் நீளமுள்ள பாதை அல்லது டேவ்லூப் அமைக்கப்பட்டு 200 உயர் திறன் கொண்ட பொறியாளர்கள் உள்பட 300 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுவரை இதில் மனிதர்கள் பயணித்துள்ளனரா?
இந்த இடத்தில் எண்ணற்ற சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுவரை அதிகபட்சமாக 387 கிலோமீட்டர் வேகத்தில் ஹைப்பர்லூப்பை இயக்கி சோதனையும் செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், இதுவரை மனிதர்களை ஹைப்பர்லூப்பின் உள்ளே உட்கார வைத்து சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை.
புதன் கோளுக்கு கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை அனுப்பி வெற்றிகண்ட நாசாவின் விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றிருந்த அனிதா சென்குப்தா, "சவாலான பொறியியல் பிரச்சனைகளை கொண்ட வேறு கோளுக்கு விண்கலம் அனுப்பும்" முயற்சியிலேயே வெற்றிபெற இயலும்போது பூமியிலேயே மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் வெற்றியடைய முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
மேலும், சோதனை மையத்தை நோக்கி சுட்டிகாட்டும் அவர், "இது ஒரு யதார்த்தமான திட்டம், ஏனெனில் நாங்கள் செய்யும் விடயங்களை கண்கூடாக காண முடியுமென்று" கூறுகிறார்.
சுருக்கமாக சொன்னால், "ஒரு வெற்றிட குழாயின் ஊடாக பயணிக்கும் மாக்லெவ் ரயிலே இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்" என்று அவர் மேலும் விளக்குகிறார்.
இதில் பயணிப்பது ஆபத்தானதா?
பல்லாயிரக்கணக்கான அடி உயரத்தில் பறக்கும் விமானம், அப்போது அது எதிர்கொள்ளும் அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு எவ்வாறு வானத்தில் பாதுகாப்பாக பறக்கிறதோ அதே போன்று ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பயணிப்பதும் பாதுகாப்பானதே என்று அவர் கூறுகிறார்.
சுருக்கமாகச் சொன்னால், "மக்களுக்கு விமானத்தில் பறப்பதிலோ அல்லது மாக்லெவ் ரயில்களில் பயணிப்பதிலோ பிரச்சனை ஏதுமில்லை என்ற நிலையில், அவை இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும் எவ்வித பிரச்னையும் இருக்காது" என்று அனிதா கூறுகிறார்.
இந்த திட்டம் பாதுகாப்பு சான்றிதழை பெற்று வரும் 2021 ஆம் ஆண்டில் வணிகரீதியான போக்குவரத்து தொடங்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
எலான் மஸ்க் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
"விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன்" திட்டத்தை ரிச்சர்ட் பிரான்சன் முன்னெடுத்து வரும் நிலையில், இந்த யோசனையை முதல் முறையாக வெளியிட்ட டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், லாஸ்ஏஞ்சலீஸின் தரைக்கடியில் தனது திட்டத்தை செயற்படுத்தி கொண்டு வருகிறார்.
மேலும், அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து வாஷிங்டனிற்கு அரை மணிநேரத்தில் செல்லும் ஹைப்பர்லூப் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசாங்கத்திடமிருந்து "வாய் மொழியிலான" சம்மதத்தை கடந்த கோடைகாலத்தின்போதே பெற்றுவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இந்தியாவிற்கும் வருகிறதா ஹைப்பர்லூப்?
சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடம், சென்னையிலிருந்து மும்பைக்கு 50 நிமிட பயணத்தை சாத்தியப்படுத்தி காண்பிக்க முடியும் என்று கூறுகிறது ஹைப்பர்லூப் நிறுவனம். சென்னை மட்டுமின்றி நாட்டின் மற்ற மெட்ரோ நகரங்களையும் இணைக்கும் பாதைகளை அறிவித்ததுடன் அதில் குறிப்பிட்ட ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான இணைய ஓட்டெடுப்பும் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதில் மும்பை-பெங்களூரு-சென்னையை இணைக்கும் திட்டம் வெற்றியும் பெற்றிருந்தது.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்ட 'விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன்', இந்தியாவில் தங்களது ஆரம்பகட்ட சோதனைகளை செய்வதற்கான அனுமதியை அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மகாராஷ்டிர அரசாங்கத்துடன் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...