ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் தேர்வில் மதிப்பெண்
முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆசிரியர்
தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்
காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு
வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவு கடந்த மாதம்
7ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வு எழுதியோர் பலர், தேர்வு முடிவுகள்
தொடர்பாக தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து ஆசிரியர் தேர்வு
வாரியத்துக்கு மனுக்கள் கொடுத்தனர்.
அந்த மனுவில், தேர்வில் தேர்ச்சி பெற்ற 2000க்கும் மேற்பட்டவர்களின்
மதிப்பெண்களில் முறைகேடு நடந்துள்ளது. முதலில் வெளியிட்ட மதிப்பெண்
பட்டியலுக்கும் பணி நியமனத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின்
மதிப்பெண்களுக்கும் மாற்றம் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால்
தேர்வு முடிவு ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 11ம் தேதி
அறிவித்தது.
மேலும் தேர்வில் இடம் பெற்ற ஓ.எம்.ஆர் தாள்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து
ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன் இறுதி
விடைக்குறிப்பில் தரப்பட்டுள்ள மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஏதாவது முரண்பாடுகள் இருந்தால் அது தொடர்பாக 18ம் தேதி மாலை 5.30
மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் நேரிலோ அல்லது பதிவு
அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம். அவ்வாறு பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து
திருத்திய சான்று சரிபார்ப்பு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய
தளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.
நேற்றுடன் கால அவகாசம் முடிந்தது.
நேற்று மாலைவரை எத்தனைபேர் கருத்து தெரிவித்துள்ளனர் என்று ஆசிரியர்
தேர்வு வாரியம் பட்டியல் தயாரிக்க உள்ளது. இந்த பட்டியல் இன்று வெளியாகும்
என்று தெரிகிறது. மதிப்பெண்களில் மாற்றம் வந்தவர்கள் தாங்களாக முன் வந்து
மதிப்பெண் மாற்றம் குறித்து ஆட்சேபம் தெரிவிப்பார்கள் என்று தேர்வு வாரியம்
எதிர்பார்க்கிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் போடும் போது அதில்
குறிப்பிட்ட அனைத்து விவரங்களுக்கும் விண்ணப்பம் செய்யும் நபரே பொறுப்பு
என்பதால், சான்றுகள், முகவரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீண்டும்
சரிபார்ப்பு நடத்தவும் தேர்வு வாரியம் உத்தேசித்துள்ளது. விரிவுரையாளர்
தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளதால், முறைகேடுகளில்
ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க
தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதிகப்படியாக மதிப்பெண்களில் திருத்தம்
செய்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், என அனைத்து தரப்பினர் மீதும்
குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் தேர்வு வாரியம் உத்தேசித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...