வாழ்க்கை முறை மாற்றமும் வணிக ரீதியிலான கல்வி முறையுமே அதிக
அளவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் என சமூக ஆர்வலர்களால்
கூறப்படுகிறது.
தமிழகத்தை கடந்த 2015-இல் 955 மாணவர்களும் 2016-இல் 981 மாணவர்களும்
இந்தாண்டு நவம்பர் மாதம் மூன்றாவது வாரம் வரை 530 மாணவர்களும் தற்கொலை
செய்திருப்பதாக காவல்துறை புள்ளி விவரம் கூறுகிறது.தேசிய அளவில்
தமிழகத்துக்கு இதில் இரண்டாவது இடம்.
தமிழகத்தில் மொத்த தற்கொலை சம்பவத்தில் மூன்றில் ஒரு பகுதி தேர்வு முடிவு
வெளியாகும் காலகட்டத்தில் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.இப்போது
மாணவர்கள் சாதாரண விஷயத்துக்குக் கூட தற்கொலை செய்து
கொள்கின்றனர்.மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் நகரங்களை காட்டிலும்
கிராமப்புறங்களில் குறைவாகக் காணப்படுகிறது.
பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் கொடுக்கப்படும் நெருக்கடி, வணிகரீதியிலான
கல்வி முறை, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இடையே அதிகரித்து வரும்
இடைவெளி, மாறும் வாழ்க்கை முறை, கலாசார மாற்றம், தோல்வியைத் தாங்க முடியாத
மனநிலை, சிறிய விஷயங்களுக்கும் உணர்ச்சிவசப்படுதல் போன்ற காரணங்களால்
தற்கொலை செய்து கொள்வதாக மன நல மருத்துவர்களால் கூறுகின்றனர்.
வாழ்க்கை முறை மாற்றம்
இது தொடர்பாக நரம்பு மருத்துவ உளவியல் நிபுணர் பி.எஸ்.விருதகிரிநாதன் கூறியது:
ஒரு காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகள் வளர்ப்பில் மிகுந்த பொறுப்புடனும்,
தனிக்கவனத்துடனும் இருந்தனர். குடும்பங்களில் பலமான உறவு முறை இருந்தது.
அனைவரிடம் ஒற்றுமை மனப்பான்மை இருந்தது. இதனால் க்கு ஒரு பிரச்னை
ஏற்பட்டால், அதை உடனடியாக தனது குடும்பத்தினருடன் ஆலோசித்து மாணவர்
எளிதாகத் தீர்வு காண முடிந்தது.
ஆனால் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.
இதனால் பள்ளி மாணவர்கள் சிறு பிரச்னையைக் கூட சமாளிக்க முடியாமல் திணறி
தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு குழந்தைக்கும் தனது பெற்றோரே முன்
மாதிரியாகவும், எடுத்துக்காட்டாகவும் இருந்தனர். ஆனால் இன்று பெரும்பாலான
பெற்றோர்கள் அவ்வாறில்லை.தங்களது குழந்தைகளைப் பள்ளி ஆசிரியர்களே
ஒழுங்குபடுத்த வேண்டும் என நினைக்கின்றனர்.
சுயநல சமூகம்
பெற்றோர், தங்களது குழந்தைகளை அளவுக்கு மீறிய பாசத்துடன் வளர்க்கின்றனர்.
இதன் விளைவாக அந்த குழந்தைகள், வீட்டில் இருப்பதைப் போன்றே வெளியிலும் அதே
பாசத்தை எதிர்பார்த்து ஏமாறுகின்றனர். சமூகத்தில் பொதுநலப் போக்குக்
குறைந்து, சுயநலப்போக்கு அதிகரிக்கிறது. இது மாணவர் சமுதாயத்தை மிகவும்
பாதிப்படைய செய்துள்ளது.
மாணவர்களிடம் எத்தகைய சூழ்நிலையையும் சமாளித்து வாழ்ந்து காட்டலாம் என்ற
மனநிலையை பெற்றோரும், ஆசிரியர்களும் உருவாக்க வேண்டும். மாணவர்களிடம்
தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவத்தையும் பிரச்னைகளை எதிர்கொண்டு அதைச்
சந்திக்கும் மன திடத்தையும் வளர்க்க வேண்டும். ஆசிரியர்கள், தங்களது
வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு வரின்மனநிலையைப் புரிந்து நடந்து கொள்ள
வேண்டும். ஒரே மாதிரியான அணுகுமுறையை கையாளக் கூடாது. ஆண்டுக்கு ஒரு
முறையாவது ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகள் நடத்த வேண்டும். இதனால்
வகுப்பறைகளில் ஆசிரியர்கள் அணுகுமுறை மாறுவதோடு, மாணவர்களுக்கு
கொடுக்கப்படும் நெருக்கடியும் இல்லாமல் போகும் என்றார் அவர்.
மன அழுத்ததில் மாணவர்கள்
"இன்றைய கல்விமுறை மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதில்
இருந்து மாணவர்கள் வெளியே வருவதற்குரிய வாய்ப்பை அவர்களது குடும்பம்
கொடுப்பதில்லை. ஒரு மாணவருக்கு எதில் ஆர்வம் உள்ளது என்று ஆசிரியர்கள்
புரிந்து கொள்வதில்லை " என்கிறார் பேராசிரியர் எஸ்.செந்தில்குமார்.
மாணவர்களின் விருப்பத்தைப் பற்றிக் கவலைப்படாத பெற்றோர்கள் தங்களது கனவுகளை
மாணவர்கள் மீது திணிக்கின்றனர். இதனால் மாணவர்கள், தங்களது இயல்புத்
தன்மையை விட்டு, மதிப்பெண் பெறும் இயந்திரமாகவே மாறுகின்றனர்.
அறிவை வளர்க்கும் கல்விக்குப் பதிலாக, இப்போது பணமீட்டும் வணிக ரீதியிலான
கல்வி மட்டுமே கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள்
பிரச்னைகளையும், தோல்விகளையும் எதிர் கொள்ளும்போது அதைச் சந்திக்கத்
துணிவில்லாமல் துவண்டுவிடுகின்றனர். தென்றலாக வீச வேண்டிய வாழ்க்கை புயலாகி
மாறி வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் துணிவதாகக் கூறுகிறார் பேராசிரியர்
எஸ்.செந்தில்குமார்.
கல்வி நிறுவனங்கள், வணிகம் சார்ந்த கல்வியை மட்டுமன்றி அறிவுசார்ந்த
கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,கல்வி நிறுவனங்கள் தங்களது
வளர்ச்சிக்காக மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக மாற்றும் நிலையையும்
கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த மாற்றங்கள் ஏற்படும்பட்சத்தில் மாணவர்கள் தற்கொலைச் சம்பவங்களை
எளிதில் தடுத்து நிறுத்துவதற்குரிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள்
கூறுகின்றனர்.
மாணவர்களும்,தற்கொலைகளும்....
தமிழகத்தில் கடந்த 2016-இல் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கை:
மாவட்டங்கள் மாணவர்கள்
அரியலூர் 17
கோயம்புத்தூர் 36
கடலூர் 32
திண்டுக்கல் 29
தருமபுரி 21
ஈரோடு 21
கன்னியாகுமரி 21
கிருஷ்ணகிரி 46
காஞ்சிபுரம் 59
மதுரை 12
நாகப்பட்டினம் 22
நீலகிரி 14
நாமக்கல் 18
பெரம்பலூர் 60
புதுக்கோட்டை 3
சேலம் 36
சிவகங்கை 35
தஞ்சாவூர் 22
தேனி 11
நெல்லை 43
திருப்பூர் 29
திருச்சிராப்பள்ளி 51
தூத்துக்குடி 34
திருவள்ளூர் 27
திருவண்ணாமலை 19
திருவாரூர் 6
வேலூர் 58
விருதுநகர் 22
விழுப்புரம் 31
சென்னை 120
கரூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மாணவர்களின் தற்கொலை வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...