ஓகி புயலினால் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம், குடும்பத்தில்
ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று, கன்னியாகுமரியில் இன்று
(டிசம்பர் 12) அறிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு,
காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் நிவாரண உதவிகள் பெறும் வகையில் சட்ட
விதிகள் தளர்த்தப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த நவம்பர் 30ஆம் தேதி ஓகி புயலினால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ரப்பர், வாழை, தென்னை மரங்கள் சாய்ந்ததால், அந்தப் பகுதி முழுவதும் விவசாயம் நசிந்தது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவர்களில் பலர் இன்னும் மீட்கப்படவில்லை; அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால், குமரி மாவட்ட மீனவர் குடும்பங்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களாக, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட சில அமைச்சர்கள் கன்னியாகுமரியில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டம் சென்றிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டவர், மீனவர் சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினார்.
அப்போது, கடைசி மீனவர் கிடைக்கும்வரை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்களைத் தேடும் பணி தொடரும் என்றும், குமரி மாவட்டத்தில் ஹெலிபேட் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
”ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கான நிவாரணத்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வீடிழந்த மீனவர்களுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், மீனவர்களுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவரது கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்.
காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் நிவாரணம் பெறும் வகையில், சட்டவிதிகள் தளர்த்தப்படும். புயலில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்; உலகவங்கி உதவியுடன் மீனவர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு, புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் செய்த ஆய்வின் அடிப்படையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதனை அறிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இவற்றில் பல அம்சங்கள், பத்து நாட்களுக்கு முன்பு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிவிப்பை நினைவூட்டுகிறது.
நாமாக எதையுமே செய்வதில்லை. பக்கத்து வீட்டுக்காரன் செய்தபிறகு நமக்கு காப்பி அடிக்க மட்டுமே தெரியும்
ReplyDelete