அனிதா: அரசுப் பணி, நிதியுதவி வழங்கிய முதல்வர்!
அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரருக்கு சுகாதாரத் துறையில் பணி வழங்கத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வில் 700க்கு 86 மதிப்பெண்கள் எடுத்துத் தோல்வியுற்றதால் அரியலூர் மாணவி அனிதா விரக்தியில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இவருடைய தற்கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
அனிதா மரணம் குறித்து ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். அவரது குடும்பத்திற்குத் தமிழக அரசு சார்பில் ரூ. 7 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று முருகன் தெரிவித்திருந்தார்.
அரசின் நிதியுதவியை வாங்க மறுத்த அனிதா குடும்பத்தினர் அமைச்சர்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அரசுப் பணியையும், நிவாரணத் தொகையையும் ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டனர்.
அதன்படி அனிதாவின் தந்தையிடம் ரூ.7 லட்சத்துக்கான காசோலையையும், அனிதாவின் அண்ணன் சதீஷ் குமாருக்கு சுகாதாரத் துறையில் அரசுப் பணி ஒதுக்கியுள்ளதற்கான அரசாணையையும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 28) வழங்கினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...