பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் முன்னேறிய வகுப்பினருக்கு ஏன் இட
ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர்
14) கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. மீதமுள்ள 31 சதவீதப் பொதுப்பிரிவு இடங்களை, மற்ற பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யத் தடை கோரி ஹரி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப் பிரிவில் மற்ற பிரிவினரும் போட்டியிடுவதால் சிறந்த கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கு இடம் கிடைப்பதில்லை என்றும், பெரும்பாலான இடங்கள் பிற பிரிவினருக்கே ஒதுக்கப்படுகின்றன என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இட ஒதுக்கீட்டு முறையால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் அடைந்த முன்னேற்றம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...