செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகிக் கொண்டிருக்கும் நிலையில்
அவற்றால் வேலைவாய்ப்புகள் பல உருவாக்கப்படும் என்று ஆய்வாளர்கள் பலர்
கூறுகின்றனர்.
தானியங்கிமயம் அல்லது ரோபோக்களால் அடுத்த 20 ஆண்டுகளில் 100 கோடிக்கும் மேலான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று வல்லுநர்களும் ஆய்வு நிறுவனங்கள் பலவும் கூறி வருகின்றன. அவற்றை நம்மால் கண்கூடாகவும் காணமுடிகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல சமீப காலமாகவே தங்களது ஊழியர்கள் பலரைப் பணிநீக்கம் செய்து வருகின்றன. இவ்வேளையில் ரோபோக்களால் எவ்வளவு வேலைகள் பறிபோகுமோ அவ்வளவு வேலைகள் புதிதாக உருவாக்கப்படும் என்று டாம் வாட்சன் கூறுகிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிற்கட்சி அரசியல்வாதியான டாம் வாட்சன் ‘தி நேஷனல் ஸ்காட்’ ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், “தானியங்கிமயம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை எவ்வளவு வேலைவாய்ப்புகளை காலி செய்கின்றனவோ அவ்வளவு வேலைவாய்ப்புகளை அவை உருவாக்கும். சரியான கொள்கைக் கட்டமைப்பு இருந்தால் அது சாத்தியமாகும்” என்று கூறியுள்ளார்.
இதேபோல, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றின் (நியூரலா) தலைமைச் செயலதிகாரியான மேசிமிலியனோ வெர்சேஸ் ’ஆட்வீக்’ ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், “என்னைப் பொறுத்தவரையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது மனிதர்களுக்கான பணியை எளிதாக்கி அவர்களது பிற முக்கிய பணிகளில் கவனம் செலுத்த போதிய நேரம் கிடைப்பதற்கு வழிவகை செய்யும். இதனால் பணியிடச் சூழலும் அவர்களின் வாழ்க்கை முறையும் மேம்படும்” என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற தொழில்நுட்பங்களால் மனிதர்களின் பணிச்சுமை குறைந்து ஒரு வாரத்திற்கு நான்கு நாட்கள் பணியாற்றி மீத நாட்களில் தங்களது வாழ்க்கை முறையைச் சிறப்பாகக் களிக்க உதவும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் கூறுகின்றனர். ரோபோக்கள் பணியிடங்களில் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றை இயக்க மனிதர்கள் வேண்டுமல்லவா?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...