''தேசிய தரவரிசை பட்டியலை போல, உயர் கல்வி நிறுவனங்களுக்கு
அங்கீகாரம் வழங்க, மாநில அளவிலும், தரவரிசை பட்டியல் வெளியிட
திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, உயர் கல்வித் துறை முதன்மை செயலர், சுனில்
பாலிவால் தெரிவித்தார்.
கருத்தரங்கு : கோவையில், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தேசிய உயர்
கல்வி வளர்ச்சி குறித்த கருத்தரங்கு, நேற்று துவங்கியது; இன்றுடன்
நிறைவடைகிறது. மாநாட்டை துவக்கி வைத்து, உயர் கல்வித் துறை முதன்மை செயலர்,
சுனில் பாலிவால் பேசியதாவது:
தமிழகத்தில், உயர் கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை, 44.3 சதவீதமாக உள்ளது.
இது, சர்வதேச விகிதத்துக்கு இணையானது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை
வெளியிட்ட, தேசிய தரவரிசை பட்டியலில், சிறந்த, 100 பல்கலைக் கழகங்கள்
பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 10 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்று உள்ளன.
இதில், அண்ணா பல்கலை, ஆறாவது இடத்தை பிடித்திருப்பது, பெருமைக்குரிய
விஷயம். முதல், 10 இடங்களில் உள்ள பல்கலைக் கழங்களுக்கு, ஐந்து
ஆண்டுகளுக்கு, 1,000 கோடி ரூபாய், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
இதோடு, 100 சிறந்த கல்லுாரிகளின் பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 37 கலை,
அறிவியல் கல்லுாரி கள் இடம் பெற்றுள்ளன. கோவை, பாரதியார் பல்கலை, சென்னை
பல்கலைக் கழகம், வரும் கல்வியாண்டுகளில், தரவரிசை பட்டியலில், முதல், 10
இடங்களுக்கு முன்னேறி செல்ல, திட்டங்கள் வகுக்கப்படும். மேலும், பல்கலை
நிர்வாகப் பணிகள் சிறப்பாக நடக்கும் வகையில், தகுதியான துணைவேந்தர்கள்
நியமிக்கப்படுவர். இதற்கான பணிகள், துணைவேந்தர் பணிக்காலம் முடிவதற்கு, ஆறு
மாதங்களுக்கு முன்பே துவங்கப்படும்.
குறிப்பாக, அழகப்பா பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம், ஜூன் மாதத்துடனும்,
அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம், மே மாதத்துடனும் முடிவதால்,
புதிய துணைவேந்தர் தேர்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.
வெளியிட திட்டம் : தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கென,
பிரத்யேகமாக மாநில தரவரிசை பட்டியல், அடுத்த எட்டு மாதங்களில், வெளியிட
திட்டமிட்டு உள்ளோம்.
கற்பித்தல், ஆய்வு, வேலை வாய்ப்பு என, ஐந்து பிரிவுகளில், இப்பட்டியல்
வெளியாகும். ஒவ்வொரு பிரிவிலும், 20 உட்பிரிவுகள் வகுக்கப்பட்டு, மதிப்பீடு
செய்யப்படும். 'நாக்' எனப்படும், தேசிய தர நிர்ணயக் குழு, அனைத்து கல்வி
நிறுவனங்களையும் ஆய்வு செய்து, அங்கீகாரம் அளிக்கும்.இவ்வாறு அவர்
பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...