பொது கழிவறையை பயன்படுத்தினால் ஆரோக்கிய கோளாறு ஏற்படும் என்று அதைத் தவிர்த்து சிறுநீரை அடக்குவதே மேல் என்று எண்ணுபவரா நீங்கள்? அது முற்றிலும் தவறு, இதனால் மேலும் பல உடல்நலக் கேடு ஏற்படுவதற்கான ஆபத்தே அதிகம் உள்ளது.
நம்முடைய சிறுநீரக பையால் 400 முதல் 500 மில்லி லிட்டர் வரையிலான சிறுநீரை தேக்க முடியும். ஆனாலும் இதை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் காலி செய்து சிறுநீரை வெளியேற்ற வேண்டும். இந்தக் கால இடைவேளை ஒவ்வொருவரின் உடல் நிலை பொருத்து மாறுபடும். ஒரு சிலருக்கு இந்தப் பை வேகமாக நிரம்பும் அப்படிப் பட்டவர்கள் நமக்கு ஏதோ பிரச்னை உள்ளது என்று எண்ணி வருந்த வேண்டாம், இது உங்களின் உடல் வாகு.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளால் தங்களது சிறுநீரை அடக்க முடியாமல் அடிக்கடி கழிவறையை உபயோகிப்பதற்கும் காரணம் இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களின் உடல் இந்தச் சிறுநீரை அடக்கும் திறனை இழந்துவிடுவதால் இவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது, அதே போல் கர்ப்பிணிப் பெண்களின் கர்ப்பப்பை இந்தச் சிறுநீரக பையை முட்டுவதால் இவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது.
இப்போது சிறுநீரை அதிக நேரம் அடக்குவதால் என்னென்ன ஆபத்துகள் வரக்கூடும் என்பதைப் பார்ப்போம். சிறுநீரக பையில் நீண்ட நேரமாகச் சிறுநீரை தேக்கி வைத்தால் நோய் தொற்று கிருமிகள் உருவாகி அது சிறுநீரக பை மற்றும் குழாய்களில் பரவுவதற்கான அபாயம் உள்ளது. சிறுநீர் குழாய்கள் மூலமாகக் கிருமிகள் கிட்னியையும் பாதிக்கக் கூடும், இதனால் சிறுநீரகம் செயலிழக்கும் வாய்ப்பும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிறுநீரை அடக்குவதால் உங்களது இடுப்பு மடி தசைகள் பலவீனமாகும், இதனால் நாள் போக்கில் சிறுநீரை அடக்கும் திறனை உங்களது உடல் இழக்க நேரிடும். நீண்ட நேரம் அடக்கிய சிறுநீர் வெளியேறும் போது அதிக வலியை ஏற்படுத்தும். இது பின் நாளில் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
இனியாவது அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்து உங்கள் ஆரோக்கியத்தை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...