பஞ்சாங்கம் என்பது, கோள்களின் இயக்கத்தை வைத்து, கால நிலைகளைக் கணித்துச்
சொல்வது. நாள், திதி, வாரம், நட்சத்திரம் உள்ளடக்கிய ஐந்து விதமான
அங்கங்களைக் கொண்டதால் அது பஞ்சாங்கம் எனப் பட்டது.
முற்காலத்தில் பஞ்சாங்கத்தை வைத்துத்தான், மழை, நீர் வளம், விவசாயம், கோடை
இவற்றை கணித்தார்கள். அது ஓரளவு துல்லியமாக அமையும் என்றாலும் சில நேரம்
பொய்த்துவிடும். வானிலை ஆய்வு மையத் தகவல்களும் அப்படித்தான் ஆகிவிடுகிறது
சில சமயங்களில். மழை வரும் என்று நம்பி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து
விட்ட பின், அன்று வெயில் காய்வதைப் பார்த்து சிரித்திருக்கிறோம்.
ஆனால், இங்கே பஞ்சாங்கத் தகவல்கள், கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே நடந்து வருவதை இப்போது உணர முடிகிறது.
பொதுவான ஒரு பழமொழி உண்டு. கார்த்திகைக்குப் பின் மழை இல்லை, கர்ணனுக்குப்
பின் கொடை இல்லை என்று! பொதுவாக, கார்த்திகை மாதம் கன மழை பெய்யும் காலம்.
அதன் பின் மார்கழி வந்துவிடும். மார்கழியில் பனிக் காலம் என்பதால், பனி
பூத்த நிலையில் மழை நின்றுவிடும்.
இந்த முறை, வடகிழக்குப் பருவ மழை வங்கக் கடலில் பலமாக மையம் கொண்டு எழுந்த
காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களால் நன்றாகவே பெய்தது. கடந்த 2015ம் வருட
டிசம்பர் 1ஆம் தேதி மேகவெடிப்பான பெருமழைக்குப் பின், எந்தத் தகவலையும்
நம்பக் கூடிய மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.
அதை உறுதி செய்யும் விதமாக, இந்த வருட பஞ்சாங்கத்தில், கார்த்திகை மாத
எச்சரிக்கையாக, கன்னியாகுமரி பாதிப்பு என கொட்டை எழுத்துகளில் குறிப்பிடப்
பட்டிருக்கிறது. அதனை நவ.30ம் தேதி வியாழக்கிழமை நேற்று வீசிய ஓக்ஹி
புயலைக் கண்ட பின் மக்கள் உணர்ந்திருப்பார்கள்.
குமரிக் கண்டம் என்று பழைய தமிழ் நூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கும்
பகுதி, கடல் கொண்டுவிட்டது என்பார்கள். இன்று எஞ்சியிருக்கும் குமரிப்
பகுதி, நேற்றைய புயலில் ‘கண்டம்’ ஆகிவிட்டது என்றுதான் சொல்லத்
தோன்றுகிறது. இதனை பஞ்சாங்கத்தில் முன்னதாகவே கணித்திருக்கிறார்கள்.
அதுபோல், அடுத்து குறிப்பிட்டுள்ள விஷயங்கள் மேலும் நம்மைக் கலவரமூட்டும்
விதமாக அமைந்திருக்கின்றன. அதிகமான சூறாவளிக் காற்று மழையால், தமிழகம்
முழுவதும் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும். அனைத்து ஆறுகளிலும்
வெள்ளம் ஏற்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது.
அதற்கு ஏற்ப, வெகு காலத்துக்குப் பின்னர், எப்போதுமே வறண்டு கிடக்கும் வைகை
ஆறு இப்போது பெருக்கெடுத்துள்ளது. பெண்ணை ஆறு, பாலாற்றிலும் தண்ணீர்
கொஞ்சம் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.
மேலும் சில குறிப்புகள் இதில் உள்ளன. அந்தமான் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
உருவாகும். புயல் வீசும்.. என்றெல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளது. அதற்கு
ஏற்ப அடுத்த 4 நாட்களில் புயல் ஒன்று உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனுஷ்கோடி சுற்றுலா மையம் ஆவதும், உப்பளங்கள் பாதி அழிவதும், குண்டாறு அணை
பாதிக்கப் படுவதும் இதில் சில விவரங்கள் பார்த்து அறிந்து கொள்ளத் தக்கவை.
தற்போது, மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் பலத்த மழையால், குண்டாறு
ஏற்கெனவே நிரம்பி வழிகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும், உலகத்தில் அசுப செய்திகள் வரும் என்றும், கடலூர், ராமேஸ்வரம்
பாதிக்கப்படும் என்றும் சுரங்க விபத்து நடக்கும் என்றும் குறிக்கப்
பட்டுள்ளது. இயற்கையின் சீற்றத்தை அப்படி ஒன்றும் நாம் எடைபோட்டு விட
முடியாதுதான்! பெரும்பாலான தகவல்கள் பல நேரங்களில் பொய்த்துப்
போயிருக்கின்றன. இருந்தாலும்.... பஞ்சாங்கம் பலவற்றை முன்னாலேயே கணிக்க
வைத்து விடுகிறதே!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...