தமிழகத்திலுள்ள அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) காலியாக இருக்கும் 1058 ஆசிரியர் பணியிடங்களை
நிரப்புவதற்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.
ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு முடிவுகள் திரும்பப் பெறப்படுவது இதுவே முதன் முறையாகும்.
பல வகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர் நியமனத்திற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த 16.06.17 அன்று வெளியிடப்பட்டது. அப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 13.08.2017 அன்று எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு, 07.11.2017 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நவம்பர் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இத்தகைய சூழலில் தான் தேர்வு முடிவுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதுடன், தேர்வில் பங்கேற்ற 1,33,567 மாணவர்களின் விடைத்தாள்களும், தேர்வுக்கான சரியான விடைகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் விடைத்தாள் சரியாக திருத்தப்பட்டிருக்கிறதா? என்பதை விடைகளுடன் ஒப்பிட்டு, ஏதேனும் தவறு இருந்தால் அதை வரும் 18
ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், அதன்பின் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இன்று (டிசம்பர் 12) அறிக்கை வெளியிட்டிருக்கும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி,. ‘’அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளின் ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டதில் இன்னொரு நன்மையும் நடைபெற வாய்ப்பிருக்கிறது. இப்பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் 107 பேர் ஆந்திரம், தெலுங்கானா, கேரளம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வில் பிற மாநிலங்களும் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 107 தொழில்நுட்ப ஆசிரியர் பணியிடங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் கல்வி கற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகமாகும்.
தேர்வு முடிவுகள் இப்போது ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், புதியப் பட்டியல் தயாரிக்கும் போது வெளிமாநிலத்தவரை தவிர்த்து விட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் சேர்க்கப்பட வேண்டும். இதன்மூலம் தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்பட்டிருந்த சமூக அநீதி சரி செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, புதிய பட்டியல் எந்த வித குளறுபடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் வாய்ப்பளிக்காமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...