அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மாதத்திற்குள் தனியார் மருத்துவக்
கல்லூரி மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்குச்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரியை நிர்வகிப்பதில் நிர்வாகிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்களுடைய கல்வி பாதிக்கப்படுவதாக அக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 17 மாணவர்கள் தங்களை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் தலைமையில் நேற்று(டிசம்பர் 22) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்தபோது, வழக்கறிஞர் என்ற போர்வையில் சிலர் கல்லூரி நிர்வாகத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
வழக்கின் உத்தரவில் கூறியிருப்பது: "இந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டால் அதற்கு அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு ஏற்க நேரிடும். மேலும் ஒரு கல்லூரி சரியாக இயங்கவில்லை என்றால் அந்தக் கல்லூரிக்கு அனுமதியளித்த அரசு தான் அங்குப் பயிலும் மாணவர்களின் கல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
தனியார் நிர்வாகத்தின் குளறுபடி காரணமாக இந்தக் கல்லூரியில் 2017-18, 2018-19 ஆகியஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு தடை விதித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
அன்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 144 மாணவர்களையும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கவேண்டும். இதற்கு ஏதுவாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை உயர்த்த ஒரு மாதத்திற்குள் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த மாணவர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கல்லூரிக்கு செல்லவில்லை என்பதால் அவர்களின் வருகைப்பதிவேட்டை கருத்தில் கொண்டு அவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும்.
மாணவர்களின் சான்றிதழ்களை அக்கல்லூரி நிர்வாகம் உடனடியாக அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். மாணவர்களின் நலன் கருதி காணொலி காட்சி மூலமாக ஜனவரியில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...