Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மார்கழி மாத சிறப்பு

மார்கழி மாத சிறப்பு
திருப்பாவை

மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் அருள்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. நாம் குறிப்பிடும் ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள், அந்த நாளின் அதிகாலைப் பொழுது மார்கழி! தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன சாஸ்திரங்கள்.
எனவேதான் ஆண்டாளும் மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்து ‘திருப்பாவை நோன்பு’ ஏற்றாள். ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரில், இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருப்பாவைத் திருவிழா சிறப்பு வாய்ந்தது.
மார்கழி மாதம் பிறந்து விட்டால், எல்லா ஆலயங்களையும் அதிகாலையிலேயே திறந்து அபிஷேகம், பூஜை, ஆராதனை என்று பக்திப் பெருக்கை ஊரெங்கும் பரவச்செய்வர். மற்ற மாதங்களில் சற்று தாமதமாக எழுபவர்கூட மார்கழியில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி தமக்குகந்த ஆண்டவனைத் துதிப்பர்.
கோதை பிறந்தஊர் கோவிந்தன் வாழும்ஊர்
சோதி மணிமாடம் தோன்றும்ஊர் – நீதியால்
நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதும்ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோன் ஊர்.
பாதங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் --- கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.
திருஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!...
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!...
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!...
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!...
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!...
உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே!...
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!...
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!...
வைணவர்கள் ஆண்டாள் அருளிய திருப்பாவை, தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி, வேங்கடேச சுப்ரபாதம் போன்ற திருப்பாடல்களைப் பாடுவர். சைவர்கள் மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை சிவன்மீது பாடிய திருப்பள்ளியெழுச்சி, திருவண்ணாமலையில் பாடிய திருவெம்பாவை முதலிய திருப்பாடல்களைப் பாடுவர். ஜீவாத்மா தனது தாமச குணத்தை நீக்கி, இறைவனைத் துதித்து பரமாத்வுடன் இணையவேண்டும் என்ற தத்துவத்தையே இவை விளக்குகின்றன. அதிகாலையில் இத்தகைய வழிபாடுகள் செய்யும்போது மனம் தெளிவுடன் இருக்கும். அதனால் மனோலயம் எளிதில் வசப்படும்.
மார்கழிக்கு ஏன் இத்தனை சிறப்பு?
இந்த மாதத்தில்தான் மகாவிஷ்ணுவுக்குகந்த வைகுண்ட ஏகாதசி வருகிறது. இந்த நாளை கீதாஜெயந்தி என்று- கண்ணன் கீதை மொழிந்த நாளென்று கீதையை வாசிப்பார்கள்.
நடராஜப் பெருமானுக்குகந்த திருவாதிரையும் மார்கழியில்தான் அமைகிறது. அந்த நாளில் அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேகம் செய்து வீதியுலா வரச்செய்வர்.
"மாஸானாம் மார்க்கசீர்ஷோஹம்' என்பது கண்ணன் வாக்கு. நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த வைகாசியையோ, ராமர் அவதரித்த சித்திரையையோ, திருமலைவாசனுக்குகந்த புரட்டாசியையோ, தான் அவதரித்த ஆவணியையோ கண்ணன் குறிப்பிடவில்லை. "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்றே கூறுகிறார்.
நமக்கு ஒரு வருடமென்பது தேவர்களுக்கு ஒருநாள். மார்கழி மாதம் அவர்களுக்கு விடியல் பொழுது. நமது விடியல் பொழுதும் தேவர்களின் விடியல் பொழுதும் மார்கழியில் ஒன்றுசேர்கிறது. இந்த சமயத்தில் செய்யப்படும் ஆன்மிக விஷயங்கள் யாவும் அதிக பலன்தரும் என்பர். அந்த சமயத்தில் தெய்வீக அதிர்வலைகள் (Divine Vibrations) வெளிப்படுவதாக ஒலியியல் (Sound Theory) கூறுகிறது. இது மிக உன்னத நிலையைத் தரக்கூடியது. இதைப் பெறுவதற்காகத்தான் மார்கழி அதிகாலை வழிபாட்டை நம் முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள்.
மார்கழி என்றாலே ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியார் நம் மனக்கண்ணில் தோன்றுவாள். எல்லா வைணவ ஆலயங்களிலும் ஸ்ரீதேவி, பூதேவிக்கிணையாக ஆண்டாளும் போற்றப்படுகிறாள். என்ன காரணம்?
ஆண்டாள் ஆடிப்பூரத்தில் உதித்தவள். (பார்வதி, காமாட்சி ஆகியோரின் அவதார நட்சத்திரமும் பூரமே). இவளை பூமாதேவி அம்சம் என்பர். இவள் சிறுவயதிலிருந்தே அரங்கன்மீது பக்திகொண்டு, அவரை மணாளனாக அடைய விரும்பினாள்.
பிருந்தாவனத்தில் கோபியரான கன்னிப்பெண்கள், அதிகாலையிலேயே யமுனையில் நீராடி,
"காத்யாயனி மஹாமாயே
மஹாயோகின்ய தீஸ்வரி
நந்தகோப சுதம்
தேவி பதிம் மே குருதே நம:'
என்று தேவியைத் துதித்து, கண்ணனையே கணவனாக அடையவேண்டினர் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. (மேற்கண்ட துதியைச் சொல்லி தேவியை வழிபட்டு நல்ல கணவனை அடைந்தோர் பலர்).
அதுபோல, வில்லிபுத்தூரையே பிருந்தாவனமாக பாவித்த கோதை தன்னை கோபிகையாக எண்ணிக்கொண்டு, அரங்கனை மணாளனாக அடைய மார்கழியில் நோன்பிருந்து திருப்பாவை என்னும் முப்பது பாடல்களைப் பாடினாள்.
"எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ' என்று மற்ற தோழியரையும் எழுப்பி, "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப்போதுவீர் போதுமினே நேரிழையீர்' என்று அவர்களையும் அழைத்து வழிபடக் கூறினாள்.
மார்கழி நோன்பு முடிந்தது. மறுநாள் அதிகாலையில், "மதுசூதனன் வந்து தன் கைத்தலம் பற்றி' மணம் புரிந்துகொண்டதாக கனவு காண்கிறாள். இந்தக் கனவு பற்றி அவள் பாடிய 11 பாடல்களில் திருமணச் சடங்குகள் எல்லாவற்றையும் பாடியிருக்கிறாள்.
"வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்'
என்ற ஆண்டாள் மொழியை அறியாதவர் யார்.
அவள் நோன்பு பலித்தது. பெரியாழ்வார் கனவில் தோன்றிய அரங்கன், "கோதையை மணப்பெண்ணாக ஸ்ரீரங்கம் அழைத்து வா' என்கிறான். திருவரங்கத்து பட்டாச் சாரியர்களுக்கும் இந்தத் தகவலைச் சொன்னான்.
அதன்படியே பெரியாழ்வார் மணக் கோலத்தில் கோதையை அழைத்துவர, கர்ப்பக்கிரகத்திலிருந்து "உள்ளே வருக' என்ற ஒலி கேட்கிறது. தளிர்நடையுடன் கோதை உள்ளே செல்ல, அவளது பௌதீக உடல் அரங்கனுக்குள் ஐக்கியமாகிறது. ஆண்டவனையே தன் பக்தியினால் மணந்து ஐக்கியமானதால் அவள் ஆண்டாளாகிறாள். எனவேதான் இந்த மார்கழி நோன்பு- கோதை நோன்பு உன்னதம் பெறுகிறது.
சிவபெருமானுக்கு திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகரும் தில்லை நடராஜருள் மறைந்தார். அதனால் தான் தில்லை நடராஜரை தரிசிக்க முக்தி என்பர்.
(திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் வசித்த வீட்டை கோவிலாகக் காணலாம். ஆண்டாளுடன் அரங்கன் சேவை சாதிக்கிறார்.
பொதுவாக எல்லா ஆலயங்களிலும் மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனை மூலவருக்கு எதிரில் காணலாம். ஆனால் வில்லிபுத்தூரில் பெருமாள் அருகிலேயே காணலாம். ஏன்? பெரியாழ்வார் கருடனின் அம்சம். அரங்கனுக்கு மாமனார். எனவே ஆண்டாள் ஒருபுறம்; மாமனார் மறுபுறம். வேறெங்கும் காணமுடியாத சேவை!).
ஆண்டாள் எவ்வாறு நோன்பிருந்தாள்?
திருப்பாவை இரண்டாவது பாடலில்,
"நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
நாட்காலே நீராடி மையிட்டெழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம்'
என்கிறாள்.
"நெய், பால் உண்ணமாட்டோம். அதிகாலையிலேயே நீராடுவோம். கண்களுக்கு மையிடமாட்டோம். கூந்தலில் மலர்சூடி முடியமாட்டோம். செய்யத் தகாதவற்றைச் செய்யமாட்டோம்' என்கிறாள் கோதை. இவ்வாறு நோன்பிருந்தால் கிட்டும் பலனை அடுத்த பாடலிலேயே, "நல்ல மழை பெய்யும். தானியங்கள் சிறப்பாக விளையும். பசுக்கள் நிறைய பால் கறக்கும். செல்வம் குறையாமல் செழிக்கும்' என்கிறாள். கடைசிப் பாடலில் "எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்' என்கிறாள்.
திருப்பாவையின் 18-ஆவது பாடலுக்கு ஒரு சிறப்புண்டு.
"உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்'
என்பதே அப்பாடல். இது ஸ்ரீராமானுஜருக்கு மிகவும் பிடித்தமான பாடல். ஒருநாள் அவர் தன் குருநாதர் நம்பியாண்டார் நம்பியின் வீட்டுக்குச் செல்லும்போது இந்தப் பாடலைப் பாடிக்கொண்டே சென்றாராம். நம்பியின் மகள் அத்துழாய் கதவைத் திறக்க, சிறுமியான அவளை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினாராம் ராமானுஜர். இவ்வளவு பெரியவர் இப்படி வணங்குகிறாரே என்று பயந்துபோன அந்தச் சிறுமி ஓடிப்போய் தந்தையிடம் சொல்ல, "அவர் உந்து மதகளிற்றன் பாடிக்கொண்டு வந்தாரா?' என்று சிரித்தபடி கேட்டாராம் நம்பி. ராமானுஜருக்கு அந்தச் சிறுமி நப்பின்னையாகவே காட்சி தந்தாளாம்.
இவ்வாறு பல பெருமைகள் பெற்ற மார்கழி மாதத்தில் அனைவரும் அதிகாலையில் எழுந்து நீராடி, அவரவர்க்கு விருப்பமான தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு குருவருள், திருவருள் பெற்று மகிழ்வோம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive