ஒரு மாணவி, ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு ஒரு கல்லூரியே இயங்குகிறது
என்றால் அதை நம்ப முடிகிறதா? ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த மகாராஜா அரசு
சமஸ்கிருதக் கல்லூரி தான் அந்த வியக்கத்தகு கல்லூரி!
ஆந்திரப்பிரதேசத்தின் பரபரப்பான விஸியாநகரத்தில், ராஜா R.S.R.K. ரங்க ராவ் கலைக் கல்லூரி, ரகு பொறியியல் கல்லூரி, MVGR பொறியியல் கல்லூரிகளுடன் ஒரு மாணவி, ஒரு தலைமை ஆசிரியரை மட்டுமே கொண்டு மகாராஜா அரசு சமஸ்கிருதக் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்தியாவின் பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்றான மகாராஜா அரசு சமஸ்கிருதக் கல்லூரி, விஸியாநகரத்தை ஆண்ட கஜபதி அரசர்களால் 1860ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பின்பு 1957ஆம் ஆண்டு ஆந்திர மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இன்று அந்த கல்லூரியின் நிலை நீரின்றி வாழும் மீனைப் போல் துடிதுடித்துக் கொண்டிருக்கிறது. காரணம் ஐந்து ஆண்டுகள் வரை பயின்று பிஏ (சமஸ்கிருதம்), பிஏ (தெலுங்கு) பட்டங்களைப் பெற யாரும் தயாராக இல்லை. இதன் விளைவாக அந்தக் கல்லூரி தற்போது இறுதி ஆண்டு பிஏ (சமஸ்கிருதம்) பயின்று வரும் ஒரே ஒரு மாணவியை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் அங்குள்ள தலைமை ஆசிரியரே ஆசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போதைய மாணவியின் இறுதி வகுப்பு முடிந்தவுடன், இந்தக் கல்லூரியில் தலைமை ஆசிரியரும், துப்புரவு தொழிலாளி மட்டுமே மீதம் இருப்பர். மாணவர்களின் பற்றாக்குறையால், சாலூர் மற்றும் எஸ். கோட்டாவிலுள்ள அரசு கல்லூரிகளுக்கு இரண்டு இளநிலை உதவியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
மகாராஜா அரசு சமஸ்கிருதக் கல்லூரியில் வேதம், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய படிப்புகள் இருந்து வந்தன. கடந்த 2010ஆம் ஆண்டு NCS குழுவின் கீழ் MR சமஸ்கிருத பாடசாலை தொடங்கப்பட்ட பின் இங்குள்ள மாணவர்கள் அனைவரும் படையெடுத்து அங்கு சென்று விட்டனர். காரணம் அங்கு இலவச மதிய உணவுத் திட்டம் இருந்தது. இதனால் மகாராஜா அரசு சமஸ்கிருதக் கல்லூரியில் வேதப் படிப்பு முற்றிலும் நீக்கப்பட்டது.
"சமஸ்கிருத பாடசாலை கல்லூரி தொடங்கப்பட்ட பின்பு இங்குச் சேர்க்கை மந்தமாகவே இருந்து வருகிறது. மேலும் தங்குமிடம், முறையான போக்குவரத்து வசதிகள் மற்றும் மேற்படிப்புகளுக்கான உதவித்தொகை போன்றவற்றிற்கு அரசாங்கத்தின் ஆதரவின்மை காரணமாகவே மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிட்டது" என இக்கல்லூரியின் ஒரே தலைமைஆசிரியரும், ஒரே ஆசிரியருமான ஸ்வப்னா ஹைன்தவி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இங்குள்ள பிஏ தெலுங்கு பாடத்திட்டம், விசாகப்பட்டினத்திலுள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்துடனும், பி.ஏ. சமஸ்கிருத பாடத்திட்டம் வெங்கடேஷ்வர வேத பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்
OLD IS GOLD
ReplyDelete