சென்னை: சென்னையில் விரைவில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
விட்டுவிட்டு மழை பெய்யும். காற்றின் நகர்வைப் பொருத்தே மழை வாய்ப்பு
இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஒகி புயலால் தமிழகத்தில் தென் மாவட்டங்களில்
கனமழை பெய்து வருகிறது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஓகி புயல் தீவிர சூறாவளியாக மாற்றமடைந்து லட்சத்தீவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு அரேபிய கடலில் உள்ள ஒகி புயல், மினிகோயில் இருந்து 110 கி.மீ.
வடகிழக்குத் திசையிலும் அமினி திவி தீவில் இருந்து 290 கி.மீ.
தென்கிழக்குத் திசையிலும் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம்
அறிவித்துள்ளது.
அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்து வரும்
தினங்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அத்துடன் ஓகி புயல்
மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணிநேரத்துக்குள் தீவிரமடைந்து லட்சத் தீவுப்
பகுதியைக் கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், இன்று மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை
ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் கணித்துக் கூறியுள்ளார். இது
தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஓகி புயலால் கன்னியாகுமரி,
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக
பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி, நெல்லையிலும் ஒரு முறை மழை வெளுத்துவாங்கும். அதன் பின்னர்
இந்த மூன்று மாவட்டங்களிலுமே மழை படிப்படியாக குறையும். அநேகமாக இன்று
பகலில் இந்த மூன்று மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
பாபநாசம், மணிமுத்தாறு, கொடையாறு, மாஞ்சோலை பகுதிகளில் மிகமிக கனமழை
பெய்யலாம்.மேற்கு மாவட்டங்களைப் பொறுத்தவரை திண்டுக்கல், தேனியில் நல்ல மழை
வாய்ப்பு இருக்கிறது. தேனியில் பெரியார் பகுதியில் மிக கனமழைக்கு
வாய்ப்பிருக்கிறது.
ஓகி புயல் லட்சத்தீவுகள் நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் வேறொரு திசை
நோக்கி நகர்வதால் காரைக்கால், கடலூர் பகுதிகளிலும் இன்று மழைக்கு
வாய்ப்பிருக்கிறது. திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற
உள்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...