Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்.

விருத்தாசலத்தில் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி தங்கள் பள்ளியிலேயே பணியாற்ற வேண்டும் எனக் கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 மாணவர்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்த தமிழ்ச்செல்வி, பணியிலிருந்து ஓய்வுபெறும் தன் முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.


கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கோ.ஆதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாகத் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வி. இவரைக் குறித்து கல்வி அலுவலரிடம் அப்பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியர்கள் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் (டிசம்பர் 13) விசாரணைக்கு வந்த கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்திய விதம் தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி விருப்ப ஓய்வு கொடுத்து விட்டுச் சென்றுவிட்டார்.

இதையறிந்த மாணவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள். தலைமையாசிரியை மீது முகுந்த அன்பும் மதிப்பு வைத்திருந்த அவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தலைமையாசிரியர் பள்ளிக்கு வராததால் மனமுடைந்த மாணவர்கள் நேற்று (டிசம்பர் 14) தங்கள் பெற்றோருடன் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்தால்தான் போராட்டத்தை நிறுத்துவோம் என மாணவர்கள் கூறியுள்ளனர். “எங்களுக்கு இதுபோன்ற ஒரு ஆசிரியர் உலகத்தில் எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டார். அவர் மீண்டும் பள்ளிக்கு வர வேண்டும். அவர்களுக்காக எங்கள் உயிரையும் கொடுப்போம்” என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்களைக் கட்டி அணைத்துக்கொண்டார். அவர்களை சமாதானம் செய்து பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவரை அதே பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் பொதுமக்களுக்கு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.


இது குறித்து தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி கூறுகையில், “ ஜாதியைச் சொல்லித் திட்டுவதாக என் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அடிக்கடி விசாரணை என்ற பெயரில் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினர். எனவே, பணி ஓய்வு பெறுவதாகத் தெரிவித்தேன். ஆனால், மாணவர்கள் என் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் நேரடியாகக் கண்டேன். என் மாணவர்களுக்காக விருப்ப ஓய்வைத் திரும்பப்பெறுவதாக மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டேன். அவர்களும் என் முடிவை வரவேற்றனர். தற்போது மீண்டும் பணிக்குத் திரும்புகிறேன்” எனக் கூறினார்.

விலகியது ஏன்?

விருப்ப ஓய்வுக் கடிதம் கொடுத்த டிசம்பர் 13ஆம் தேதி அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், “தோழர்களே, தொடர்ந்து 28 ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். எனது பணிக்காலத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தியுள்ளேன். இதில் மூன்றரை ஆண்டுக் காலம் தலைமையாசிரியர் பணி. தலைமையாசிரியராகப் பணியாற்றிய இரண்டு பள்ளிகளையும் எனது சொந்த செலவிலும் நண்பர்கள் உதவியோடும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக வளப்படுத்தியுள்ளேன்.

கல்வித் தரத்தில் தனியார் பள்ளிகளையும் மிஞ்சும் விதத்தில் வளர்த்தெடுத்துள்ளேன்.

கடந்த ஆண்டு எமது பள்ளி மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான விருதினை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றது.

ஒரு ஆசிரியராக மட்டுமின்றி தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு படைப்பாளியாக முக்கியமான பங்களிப்புகளை செய்திருக்கிறேன். முக்கியமான விருதுகளை, வாசக அபிமானத்தைப் பெற்றிருக்கிறேன்.

இந்நிலையில் இரண்டுமுறை மாவட்ட அளவிலான அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொண்டேன். இவற்றின் விளைவாக எனக்கான நீதி மறுக்கப்பட்டதை எண்ணி மனம் வருந்தினேன்.

அரசு, அதிகாரம் என்பது ஒரு இறுகிய பாறை. நான் ஒரு சிட்டுக்குருவி. பாறையோடு மோதி என் தலையை உடைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதிகாரத்தின் நிழலில் அமர்ந்து நீதியை, அறத்தைப் பேச முடியாது என்பதை உணர்ந்த தருணமிது. நேற்று ஒரு விசாரணைக்காக வந்திருந்த மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரின் முன்னிலையில் எனது விருப்ப ஓய்வுக் கடிதத்தினைக் கொடுத்துவிட்டேன். விட்டு விடுதலையான சிறு பறவையாக இப்போது என்னை உணர்கிறேன்.

இனி... ஒரு படைப்பாளியாக படைப்புகள் வாயிலாகவும் இலக்கிய அரங்குகள் வாயிலாகவும் உங்களோடு உரையாடுவேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

இன்று (டிசம்பர் 15) அவர் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive