5ஜி சேவையைக் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை நடத்த
உயர்மட்டக் குழு வருகிற டிசம்பர் 27ஆம் தேதி கூடுகிறது.
தொலைத் தொடர்புத் துறையில் இந்தியாவில் தற்போது 4ஜி சேவை பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. அடுத்தகட்டமாக 5ஜி சேவையை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. அதற்கான உயர்மட்ட ஆலோசனைக் குழு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நாளை புதன்கிழமை (டிசம்பர் 27) நடைபெறுகிறது.
5ஜி சேவையைப் பொறுத்தவரையில் 50 சதவிகிதம் இந்தியச் சந்தையும், 10 சதவிகிதம் சர்வதேசச் சந்தையையும் இலக்காக வைத்துக் கொண்டு வரப்படுகிறது. இந்த ஆலோசனைக் குழுவில் இந்தியாவின் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களின் தலைவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களும் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 2020ஆம் ஆண்டில் 5ஜி சேவையை அமல்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த உயர்மட்டக் குழுவில் 22 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தத் திட்டத்துக்கான மதிப்பீடுகள், ஒப்புதல்கள் மற்றும் தொழில்நுட்பப் பணிகளைத் தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் அருணா சுந்தரராஜன் செய்துவருகிறார்.
5ஜியின் மூலம் ஒரு விநாடிக்கு 10 ஜி.பி. வேகத்தில் இணைய சேவையைப் பயன்படுத்த இயலும். மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் 3ஜி மற்றும் 4ஜி சேவையே இன்னும் முழுமை பெறவில்லை. மற்ற முன்னணி நாடுகளில் வழங்கப்படுகின்ற இணைய வேகத்துக்கு இணையாகவும் இந்தியாவில் வழங்கப்படுவதில்லை. இதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளபோதிலும், இதன்மீது கவனம் செலுத்தி ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதையே முழுமையாக்காமல் மத்திய அரசு 5ஜி சேவையை வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...