விபத்துகளால் தொடரும் உயிரிழப்புகளை, மூன்று ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்தும் வகையில்,
'சாலை பாதுகாப்பு சட்டம் - ௨௦௦௭'ல் உள்ள குறைபாடுகளை திருத்தி, புதிய பரிந்துரைகளை, தமிழக அரசிடம் போக்குவரத்து துறை சமர்ப்பித்து உள்ளது.
தமிழகத்தில், விபத்துகளால் ஆண்டுக்கு, 12 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். இதை, நான்கு ஆண்டுகளில், பாதியாக குறைக்கும்படி, ஐ.நா., வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து, விபத்துகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பரிந்துரைக்க, போக்குவரத்து துறை கமிஷனர் தலைமையில், அதிகாரிகள் குழு ஒன்றை, தமிழக அரசு நியமித்தது.
இக்குழுவின் ஆய்வில், சட்ட அமலாக்கத்தில் குறைபாடு; இலக்கை நிர்ணயித்து செயல்படாதது; பாதுகாப்புக்கான நிதியை ஒதுக்காதது; ஒருங்கிணைந்த துறைகளுக் கிடையே, தொழில்நுட்ப புரிதல் இல்லாதது... தொழில்நுட்ப முன்னேற்றம் இல்லாதது; தேசிய நெடுஞ்சாலை குறைகளை தீர்க்க, இன்ஜினியரிங் சார்ந்த தீர்வு இல்லாததே, விபத்துகள் அதிகரிக்க காரணம் என, தெரிய வந்தது.
இது தொடர்பாக, அரசுக்கு, அதிகாரிகள் குழு அளித்துள்ள புதிய பரிந்துரைகள்:
உலகில் சாலை பாதுகாப்பில், முன்னேறிய நாடுகளுடன் ஒப்பீட்டு ஆய்வு செய்ய வேண்டும்
ஆர்வமுள்ள, திறமையான நெடுஞ்சாலை இன்ஜினியர்கள், புதிய கருவிகள் உதவியுடன், விபத்து சார்ந்த புள்ளி விபரங்களை சேகரிக்க வேண்டும்.
போலீஸ், சுகாதாரம், போக்குவரத்து
உள்ளிட்ட துறையினர், சேகரித்த விபரங்களை, காலாண்டில், மாவட்ட அளவிலும், ஆண்டுக்கொரு முறை, மாநில அளவிலும் ஆராய வேண்டும்
2018 ஏப்ரலுக்கு பின், 'ஏர்லாக் பிரேக் சிஸ்டம்' உள்ள வாகனங்களை மட்டுமே விற்க வேண்டும். '125 சிசி' திறன் படைத்த வாகனங்களில், எப்போதும் எரியும் முகப்புவிளக்குகள் இருக்க வேண்டும்.
முன் பம்பர், இன்ஜின் உள்ளிட்டவற்றில், ஆர்.டி.ஓ., அனுமதியின்றி மாற்றம் செய்யக் கூடாது
பழைய வாகனங்களின் தரச்சான்றுகளை கண்காணிக்க வேண்டும். கனரக வாகனங்களில், கட்டாயம், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். படிக்கட்டு பயணத்தை தடுக்க, பஸ்களில் கதவுகள் அமைப்பதோடு, அதிக கூட்டத்தை தவிர்க்க, போதுமான பஸ்களை இயக்க வேண்டும்
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுடன் இணையும் கிராமப்புற சாலைகளில், அணுகு சாலைகள் அமைத்து, குறைந்த வேகத்தில் வாகனங்கள் செல்ல, வழிவகை செய்ய வேண்டும்
ஜி.ஐ.எஸ்., அடிப்படையில், வேகத்தடை, வேக நிர்ணயம் செய்து, கேமராக்களால் கண்காணிக்க வேண்டும். இடைத்தடுப்புகளை புதிய முறைகளில் அமைக்க வேண்டும்.
சாலை ஓரங்களில் உள்ள நீர்நிலைகள், பள்ளத்தாக்குகளை குறிக்க, அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும். சிக்கலான, 'எஸ்' வளைவுகளை குறிக்க, ஒளிரும் அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும்
வாகனம் ஓட்டுவதை, கணினி தொழில்நுட்ப முறையில் ஆய்வு செய்து, லைசென்ஸ் வழங்கவேண்டும்.
மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் அருகேயும், பாதசாரிகள் கடக்கும் இடங்களிலும், அதிவேகமாக பயணிப்போருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்
இரவில் நீண்ட துாரம் வாகனங்களை இயக்குவோர், இடையில் ஓய்வெடுத்துச் செல்வதை கட்டாயமாக்க வேண்டும்.
சாலை பாதுகாப்பு விதிகளை மீறுவோரை, கேமராக்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட், ரீடர் வழியாக கண்காணித்து, அபராதம் விதிக்க வேண்டும்
டூ - வீலர் ஓட்டுபவரும், அமர்ந்து செல்வோரும், ஹெல்மெட் அணிய வேண்டும்; குடி போதையிலும், மொபைல் போனில் பேசியபடியும் வாகனம் ஓட்டுவதை தடுக்க வேண்டும்
முறைகேட்டை தடுக்க, ஆதார் எண்ணை, லைசென்சுடன் இணைக்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட லைசென்ஸ் விபரங்களை, இணையதளத்தில் பதிய வேண்டும். 'ரேசில்' ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, போதிய நிதி ஒதுக்க வேண்டும். விபத்து பகுதிகளில், போலீஸ் ரோந்து, ஆம்புலன்ஸ் வசதி, முதலுதவி மையங்கள் அமைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாக னங்களுக்கு, தனி வழி அமைக்க வேண்டும்
இவற்றை, தமிழக அரசு செயல்படுத்தினால், 3 ஆண்டுகளில், விபத்துகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கலாம். இவ்வாறு, அதிகாரி கள் குழு பரிந்துரைத்துள்ளது. இவற்றை, அரசு ஏற்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...