ஒரே க்ளிக்கில் 100 தட்கல் டிக்கெட்டுகள்! ரயில்வேயை அதிரவைத்த சாஃப்ட்வேர்
ரயிலில் பயணம் செய்ய கடைசி நேர முன்பதிவுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தட்கல் முன்பதிவு முறை நடைமுறையில் இருக்கிறது.
ஒவ்வொரு ரயிலிலும் தட்கலுக்கென ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாளில் தட்கல் முன்பதிவைப் பயணிகள் செய்துகொள்ளலாம். ரயில்வே கவுன்டர்களிலும் ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு இணையதளமான ஐ.ஆர்.சி.டி.சி ஆகியவை மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
குறைவான எண்ணிக்கையிலேயே டிக்கெட்டுகள் ஒதுக்கப்படுவதால், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இந்தநிலையில், ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தை முடக்கி, கம்ப்யூட்டர் மவுஸில் ஒரே ஒரு க்ளிக்கின் மூலம் நூற்றுக்கணக்கான டிக்கெட்டுகளை ஏஜெண்டுகள் புக் செய்யும் வகையில் சாஃப்ட்வேர் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதை சி.பி.ஐ கண்டறிந்தது.
அந்த சாஃப்ட்வேர் குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள், அதை வடிவமைத்த அஜய் கார்க் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அணில் குப்தா ஆகியோரை உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூரில் நேற்று கைது செய்தனர். இதில் அஜய் கார்க், சி.பி.ஐ.யின் ஊழல் ஒழிப்புப் பிரிவில் சாப்ட்வேட் புரோகிராமராகப் பணிபுரிந்தவர். அவர்களை டெல்லிக்கு அழைத்துவந்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த சாஃப்ட்வேர்களை ரயில் டிக்கெட் புக் செய்யும் ஏஜென்டுகளுக்கு குறிப்பிட்ட விலையில் விற்று வந்ததும், அந்த சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி நாடு முழுவதும் பல்வேறு ஏஜென்டுகள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தவும், ஐ.ஆர்.சி.டி.சி இணையதள பாதுகாப்பைப் பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...