முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (நவ.2 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகள், முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக நாடு முழுவதும் 129 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய 6 நகரங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மையங்கள் தமிழகத்திற்கு பேதுமானவையல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு 31.10.2017 மாலை 3.00 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகத்திலுள்ள 6 தேர்வு மையங்களும் நிரம்பி விட்டதால் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 6 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இடங்கள் இருப்பதால் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அன்புமணி, தமிழகத்தில் குறைந்தது 13 நகரங்களிலாவது தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்குக் கூடுதல் தேர்வு மையங்களை கேட்டுப் பெறுவதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டதாகக் கூறியுள்ள அவர், கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கத் தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...