தமிழக மாணவர்களின் நலனுக்காக அரசு தொடங்கியுள்ள போட்டித் தேர்வு பயிற்சி
மையங்களில், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க ஓய்வுபெற்ற கல்லூரிப்
பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும்
கல்வியாளர்கள் பயன்படுத்தப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐஏஎஸ் தேர்வுக்கு சிறந்த பயிற்சி:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகள்
(ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டவை) தேர்வுக்கு ஏழை மாணவர்களைத் தயார் செய்வதற்காக
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பயிற்சி மையம் மிகச் சிறந்த பயிற்சியை
அளித்து வருகிறது. சென்னை பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள இம்மையத்தில்
ஆண்டுக்கு 225 பேருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் உணவுக்காக மாதம் ரூ. 2,250 வீதம்
தமிழக அரசு வழங்குகிறது. இங்கு பயில்பவர்களில் ஆண்டுக்கு 40 முதல் 50 பேர்
வரை குடிமைப் பணிகள் தேர்வில் தகுதி பெற்று பணி வாய்ப்பைப் பெறுகின்றனர்.
அந்த மையம் அரசு சார்பில் நடத்தப்படுவதே இதற்குக் காரணம்.
இப்போது தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் நீட் தேர்வுகான பயிற்சி
மையமும் முழுக்க முழுக்க அரசு சார்பில் நடத்தப்பட வேண்டும் என்கின்றனர்
பேராசிரியர்கள்.
இது குறித்து தமிழக அரசு குடிமைப் பணிகள் (ஐஏஎஸ்) பயிற்சி மைய முன்னாள்
முதல்வர் பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறியது: மத்திய அரசு போட்டித்
தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கும் நோக்கத்தில், பயிற்சி
மையங்களைத் தமிழக அரசு தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்களுக்கு
பயிற்சி அளிக்க தனியார் பயிற்சி மையத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு
ஒப்பந்தம் செய்துள்ளது.
நீண்ட காலத்துக்கு...
தனியார் பயிற்சி மையம் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பது நீண்ட
காலத்துக்குப் பலன் தராது. மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வுக்காக
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பயிற்சி மையத்தில் முதல்நிலைத் தேர்வு,
முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் மாணவர்களுக்குப்
பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் முதன்மைத் தேர்வு வரை ஓய்வுபெற்ற அரசுக் கல்லூரி பேராசிரியர்கள்,
தலைசிறந்த கல்வியாளர்களைக் கொண்டே பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம்
நிலையான நேர்முகத் தேர்வுக்கு மட்டுமே ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மூலம்
பயிற்சி அளிக்கப்படும்.
தனியாரைக் காட்டிலும்...
நீட் போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு பள்ளி மாணவர்களைத் தயார்
செய்வது என்பது, குடிமைப் பணிகளுக்கு அளிக்கப்படுவது போன்று கடினமானது
அல்ல. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட பாடத் திட்டங்களில்தான் மாணவர்களுக்கு
பயிற்சியளிக்கப்படும் என்பதால், நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு
எளிதாகப் பயிற்சி அளித்துவிட முடியும். வேகமாக விடையளிக்கும் பயிற்சி
மட்டுமே கூடுதலாகக் கற்றுத்தர வேண்டியிருக்கும்.
எனவே, அரசு இப்போது அறிமுகம் செய்துள்ள போட்டித் தேர்வு பயிற்சி
மையங்களிலும் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள்,
ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்டு பயிற்சி அளிக்க முன்வர வேண்டும். அதுதான் நீண்ட
காலத்து பயனுள்ளதாக அமையும் என்றார்.
இது குறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற ஆலோசகர் சிவராமன்,
தனியார் அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பயிற்சி அளிப்பது, அந்த
நிறுவனம் பிரபலமடையவே பயன்படும். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசுப் பள்ளி
மாணவர்களைத் தனியார் பயிற்சி மையங்கள் ஈர்ப்பதற்கும் வாய்ப்பாக அமைந்து
விடும். எனவே, இப்பயிற்சி மையங்களில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க
தலைசிறந்த கல்வியாளர்களையும் ஓய்வுபெற்ற பேராசிரியர்களையும் அரசு
பயன்படுத்த வேண்டும் என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...