கோவை:மூன்றே மாதத்தில் மக்கும் தன்மை இருப்பதால், பிளாஸ்டிக்கிற்கு
மாற்றாக, மக்காச்சோள கழிவில் தயாரிக்கப்பட்ட 'கேரி பேக்' பயன்படுத்த, கோவை
மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் வரை குப்பை சேகரமாகிறது. இதில்,
குறைந்தது, 100 டன் வரை, பிளாஸ்டிக் கழிவுகளாக இருக்கின்றன. டீக்கடை,
பழக்கடை, பூக்கடை, சந்தை, உணவகங்கள் மற்றும் ஜவுளி கடைகள் என, பல வகைகளில்
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பயன்பாட்டை
முற்றிலும் ஒழிக்க, மாநகராட்சி பகீரத முயற்சி எடுத்து வருகிறது.
பல வகைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட, பயன்பாடு இன்னும்
தொடர்கிறது. வணிக நிறுவனத்தினருடன் ஆலோசித்தபோது, 'நுகர்வோருக்கு ஏதேனும்
ஒரு வகையில் பொருளை பார்சல் செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது.
மாற்றுப்பொருள் அறிமுகப்படுத்தினால், மாறிக்கொள்ள தயாராக இருக்கிறோம்' என,
தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆய்வு செய்து, பெங்களூருவில், மக்காச்சோள கழிவுகளில் 'கேரி
பேக்' தயாரிப்பது கண்டறியப்பட்டது. அதன் மக்கும் தன்மை, சுற்றுப்புறச்
சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா, விலங்கினங்கள் உட்கொண்டால், உடல் நலனுக்கு
பாதிப்பு ஏற்படுத்துமா என, விஞ்ஞான பூர்வமாக அலசப்பட்டது.
மூன்றே மாதத்தில் மக்கும் தன்மை கொண்டது; பொடிப்பொடியாகி, மண்ணோடு கலந்து
விடும். சுடுநீரில் கரைந்து விடும். தீ வைத்து எரித்தாலும், துர்நாற்றம்
வீசாது என்பது தெரியவந்தது. அதன்பின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் ஒரு
பகுதியாக, 'லோகோ' அச்சிட்டு, கோவையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வர்த்தக துறையை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் அழைத்து, கோவை மாநகராட்சி
'ஸ்மார்ட் சிட்டி - லோகோ' அச்சிட்ட, மக்கும் தன்மையுள்ள 'கேரி பேக்'
மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்படும். படிப்படியாக தடை செய்யப்பட்ட
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிக்கப்படும்.மக்காச்சோள கழிவில் இருந்து,
மக்கும் தன்மையுள்ள கேரி பேக் தயாரிப்பது எப்படி என, கோவையில் உள்ள
தொழில்முனைவோருக்கும், தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்ப பயிற்சி
அளிக்கப்பட்டது. தேவையான மூலப்பொருட்கள் தருவித்துக் கொடுக்கப்படும்.
தற்போது விலை அதிகமாக இருந்தாலும், அதிகப்படியானோர் பயன்படுத்த
துவங்கினால், சற்று குறையும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...