பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுஉள்ளது.
தமிழக அரசின் பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.பல ஆண்டுகளாக, பல்கலைகளில் நிதி வரவு - செலவை சரியாக நிர்வகிக்காததால், பல்கலைகளில் கடும் நிதிச்சுமை ஏற்பட்டு உள்ளது. அதே நேரம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், 1,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உட்பட, 8,000க்கும் மேற்பட்டோர், வேலையின்றி சம்பளம் பெறுவதால், அந்த பல்கலைக்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளது.
இப்பல்கலையால் அரசுக்கு, மாதம் தோறும், 50 கோடி ரூபாய் செலவாகிறது. எனவே, பணியின்றி இருக்கும், பேராசிரியர்கள், ஊழியர்களை, அரசு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு மாற்ற, உயர்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, எந்த பல்கலையிலும், அரசு கல்லுாரியிலும், புதிய பணி நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை விதிக்கப்பட்டு, ஓர் ஆண்டு முடிந்த நிலையில், தற்போது பணி நியமன பணிகளை தொடரலாமா என, பல பல்கலைகளின் துணைவேந்தர்கள் அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு, தமிழக அரசு தரப்பில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின், நிதி இருப்பு குறைவாக இருப்பதாலும், ஒவ்வொரு பல்கலையிலும் வருவாய் குறைந்து, அதிக நிதிச்சுமை உள்ளதாலும், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ள வேண்டாம் என, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தற்போதைய நிலையில், பல்கலைகளில் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாறாக செலவை அதிகரிக்க கூடாது என்றும், துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...