Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குழந்தைகளை முதலீடாக நினைக்காதீர்கள்! இன்று, 'குழந்தைகள் தினம்'

குழந்தை வளர, அதற்கு அறிவுரை வழங்க வேண்டுமா அல்லது வளர்க்கும் பெற்றோர் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டுமா... 


சத்குருவின் மாறுபட்ட பார்வையில், குழந்தை வளர்ப்பு குறித்த சில கருத்துக்கள் உங்களுக்காக...குழந்தை வளர்ப்பு என்பது, சமயோசிதமாய் கையாளப்பட வேண்டிய ஒரு விஷயம். வரையறுக்கப்பட்ட விதிகள் ஏதும் அதற்கென்று கிடையாது. ஒவ்வொரு குழந்தைக்கும், வெவ்வேறு அளவிலான கவனிப்பு, பாச வெளிப்பாடு, கண்டிப்பு தேவைப்படுகிறது.ஒருவேளை, நான் தென்னந்தோப்பில் நின்று கொண்டிருக்கும் போது, 'செடிக்கு எவ்வளவு நீர் ஊற்ற வேண்டும்' என நீங்கள் கேட்டால், 'குறைந்தபட்சம், ஒவ்வொரு செடிக்கும், 50 லிட்டர் ஊற்ற வேண்டும்...' என்பேன்.நீங்களோ, வீட்டிற்குச் சென்று, உங்கள் ரோஜா செடிக்கு, 50 லிட்டர் தண்ணீர் விட்டால், அது இறந்து போய் விடும். உங்கள் வீட்டில், எம்மாதிரியான செடி இருக்கிறது; அதற்கு எந்த மாதிரியான கவனிப்பு தேவை என, கவனிப்பது அவசியம்.
குழந்தை, ஒரு பாக்கியம்
இந்தக் குழந்தை, இந்த ஆனந்தப் பெட்டகம்; உங்கள் மூலமாக, உங்கள் வீட்டிற்கு வந்திருப்பது ஒரு பாக்கியம். அவர்கள் உங்கள் சொத்தல்ல; உங்கள் உடைமை அல்ல. அவர்களைக் காண்பதில், அவர்களின் மழலையைக் கேட்பதில் மகிழுங்கள்; அவர்களை பேணிப் பாதுகாத்து, அவர்களது வளர்ச்சிக்கு துணையாய் இருப்பது எப்படி என, பாருங்கள். 
அதை விடுத்து, உங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாக அவர்களை எண்ணாதீர்கள்.
போக்கில் விடுங்கள்
குழந்தைகளுக்கு என்னவாக வேண்டுமோ, அவர்கள் அதாகவே ஆக வழி செய்யுங்கள். வாழ்வை பற்றிய உங்கள் கருத்துகளை, அவர்கள் மீது திணிக்க நினைக்காதீர்கள். நீங்கள் உங்கள் வாழ்வில் சிந்திக்க கூட துணிந்திராத செயல்களை, உங்கள் குழந்தை செய்யட்டும்; அப்போது தான் இவ்வுலகம் முன்னேறும்.
உண்மையான அன்பு
குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது தான் உண்மையான அன்பு என, தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர், மக்கள். அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கித் தருவது மடமை. உண்மையான பாசம் இருப்பின், என்ன தேவையோ அதை மட்டும் செய்வதே போதுமானது. உண்மையாகவே ஒருவரை நீங்கள் நேசித்தால், அவர் மனதில் உங்கள் மீது கசப்பு தோன்றும் என்ற நிலை இருந்தாலும், அவர்களுக்கு எது நல்லதோ, அதை மட்டுமே நீங்கள் செய்ய எத்தனிப்பீர்கள்.

அவசரம் இல்லை

ஒரு குழந்தை, குழந்தையாகவே இருப்பது மிக மிக முக்கியம். அவரை, அவசர அவசரமாக முதிர்ச்சியடைந்த, வாலிப வயசுக்குள் தள்ள எந்த அவசியமும் இல்லை.பின், நீங்களே நினைத்தாலும், அவரது குழந்தைப் பருவத்தை, அவருக்குத் திருப்பித் தர முடியாது. அவர் குழந்தையாய் இருக்கும் போது, குழந்தையாகவே நடந்து கொள்வது அழகு.
வளர்ந்து விட்ட பின், அவர் குழந்தையைப் போல் நடந்து கொண்டால், அதைத் தான் பொறுத்துக் கொள்ள இயலாது. ஒரு குழந்தையை, அவசர அவசரமாய் முதிர்ச்சியடையச் செய்ய, எந்தத் தேவையும் இல்லை.
ஒப்பிட்டு பாருங்கள்
குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுப்பதற்கு, உங்களுக்கு வாழ்க்கை பற்றி என்ன தெரியும்? பிழைப்பு நடத்துவதற்கு ஒன்றிரண்டு தந்திரங்களை வேண்டுமானால், அவர்களுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கலாம்.கொஞ்சம் உங்கள் குழந்தையோடு, உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். உங்கள் இருவரில் அதிக சந்தோஷத்துடன் இருக்கக் கூடியவர் யார்... சந்தேகத்திற்கு இடமின்றி குழந்தை தானே.உங்களை விட, அவர் தான் சந்தோஷமாய் இருக்கிறார் என்றால், வாழ்க்கைக்கு ஆலோசகராக இருக்கக் கூடிய தகுதி, உங்களுக்கு இருக்கிறதா, அவருக்கு இருக்கிறதா, உங்கள் வாழ்வில் குழந்தை நுழைந்து விட்டதென்றால், அது நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தருணம்; கற்றுக் கொடுக்க வேண்டிய நேரமல்ல.
ஆன்மீக சார்புடையவர்கள்
தேவையின்றி நாம் குட்டையைக் குழப்பாவிடில், குழந்தைகள், இயற்கையிலேயே ஆன்மீக வாய்ப்பிற்கு மிக நெருக்கமாய் இருப்பவர்கள் தாம். பொதுவாக, குழந்தைகளின் பெற்றோரோ, ஆசிரியர்களோ, சமூகமோ, 'டிவி'யோ குழந்தைகளை குழப்பி விடுகின்றனர். 
சுற்றியிருக்கும் இந்த தாக்கங்களைக் குறைத்து, உங்கள் அடையாளங்கள், உங்கள் நம்பிக்கை, மற்றும் அவ நம்பிக்கைகளை உங்கள் குழந்தை மீது திணிக்காமல், அக்குழந்தை, தன் இயற்கையான புத்திசாலித்தனத்தால் வளர்ந்து மலர, ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு வளர்ந்தால், 'ஆன்மிகம்' என்ற சொல் பற்றி தெரியாமலேயே, அவர் ஆன்மிகத்தில் வேரூன்றி இருப்பார்.
அன்பான சூழ்நிலை
பயம், பதற்றம் போன்றவற்றிற்கு கண்முன்னே ஒரு உதாரணமாய் நீங்கள் வாழ்ந்து, உங்கள் குழந்தை மட்டும் ஆனந்தமாய் வாழ வேண்டும் என எதிர்பார்த்தால், அது எப்படி சாத்தியமாகும். அவர்களும் பயத்தையும், பதற்றத்தையுமே கற்றுக் கொள்வர். அவர்களுக்கு நீங்கள் செய்யக் கூடியவற்றுள் சிறந்தது, அவர்கள் வளர ஒரு அன்பான, ஆனந்தமான சூழலை உருவாக்கித் தருவது தான்.
நட்புறவு அவசியம்
எதற்கெடுத்தாலும், நீங்கள் நினைப்பதையே, உங்கள் குழந்தை செய்ய வேண்டும் என்ற அதிகாரத் தொனியை விடுத்து, உங்கள் குழந்தையுடன், ஒரு ஆழமான நட்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அரியாசனத்தில் அமர்ந்து, 'இதைச் செய்... அதைச் செய்யாதே...' என்று ஆணை இடாதீர்கள். குழந்தைக்கு கீழே உங்களை வைத்து, அக்குழந்தை, உங்களிடம் மிக எளிதாய் பேசக்கூடிய, பழகக்கூடிய சூழ்நிலையை உருவாக்குங்கள்.
குழந்தைகளிடம், அன்பைத் தானே எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், பெரும்பாலான பெற்றோர், 'நீ என்னை மதிக்க வேண்டும்...' என்றே சொல்கின்றனர்.சில ஆண்டுகள் முன்பே பிறந்து விட்டீர்கள்; உடலளவில் பெரிதாக இருக்கிறீர்கள்; ஒரு சில பிழைப்பு யுக்திகள், கைவசம் வைத்திருக்கிறீர்கள். இதைத் தவிர்த்து, வேறெந்த வகையில், உங்கள் குழந்தையை விட, நீங்கள் மேலான உயிராகி விட்டீர்கள்.
வசீகரமாக மாறுங்கள்
ஒரு குழந்தை, பலவற்றால் கவரப்படுகிறது. 'டிவி', அக்கம்பக்கத்தினர், ஆசிரியர்கள், பள்ளிக்கூடம், இன்னும் பல நுாறாயிரம் விஷயங்கள். இவற்றில், எது மிக கவர்ச்சிகரமாக அதற்கு தோன்றுகிறதோ. அத்திசையிலேயே அக்குழந்தை பயணிக்கும். 
ஒரு குழந்தையின் தந்தையாக அல்லது தாயாக நீங்கள் செய்ய வேண்டியது, அக்குழந்தையை கவர்ந்திடும் விதத்தில், உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வது தான்.வேறெதையும் விட, பெற்றோரான உங்களிடம் இருப்பதே, அக்குழந்தைக்கு வசீகரமான விஷயமாய் இருக்க வேண்டும். நீங்கள் ஆனந்தமான, புத்திசாலியான, அற்புதமான மனிதராய் இருந்தால், அக்குழந்தை வேறொவரின் துணையையும் எதிர்பாராது; எதுவாக இருந்தாலும், நேரே உங்களிடம் வந்து, தனக்கு வேண்டியதைக் கேட்கும். உண்மையிலேயே, குழந்தையை நன்முறையில் வளர்க்க நீங்கள் ஆசைப்பட்டால், முதலில், உங்களை அமைதியான, அன்பான உயிராய் மாற்றிக் கொள்வது 
அவசியம்.




2 Comments:

  1. மிக்க நன்றி,
    மீண்டும் குழந்தையாக மாற சத்குருவின் ஆசிர்வாதத்தை வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive