பள்ளிகளில் கணினிக் கல்வியானது மாணவர்கள் தொழில் வளர்ச்சி பெற முக்கிய
பங்கு வகிக்கிறது.
இணைய வசதியுடன் உள்ள கணினியானது மாணவர்கள் புதிய திறன்கள் மற்றும் தற்போதைய படிப்பினைகளை மேன்மையான முறையில் கற்றுக்கொள்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மற்ற நாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி, தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி அறிவியல், இணையக் கூற்றுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்கள் திறம்பட பயிற்றுவிக்கப்படுகிறது.
இணைய வசதியுடன் உள்ள கணினியானது மாணவர்கள் புதிய திறன்கள் மற்றும் தற்போதைய படிப்பினைகளை மேன்மையான முறையில் கற்றுக்கொள்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மற்ற நாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி, தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி அறிவியல், இணையக் கூற்றுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்கள் திறம்பட பயிற்றுவிக்கப்படுகிறது.
கணினிகள் மற்றும் இண்டர்நெட் சார்ந்த பயன்பாடுகள் அசுர வேகத்தில் நாளுக்கு
நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட பெரும்பாலான வீடுகள்,
அலுவலகங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களில் கணிப்பொறி இன்று ஒரு
இன்றியமையாத சாதனமாக மாறி வருகிறது. மேலும், தனியார் பள்ளிகளின் பல்வேறு
அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு கணினிகளை பயன்படுத்தி, புதிய தொழில்நுட்ப
கருவிகளின் பயன்பாடுகளை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர் (தமிழக அரசுப்பள்ளி
மாணவர்கள் தவிர…).
(செல்வி. ரங்கநாயகி - ஈரோடு).
*”பெற்றோர்களின் தனியார் பள்ளி மோகமும், கணினிக் கல்வியும்”*
தற்போது கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்கள் தனியார்
பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதலே பயிற்றுவிக்கப்படுகின்றன. பெற்றோர்கள்
தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும்
இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். அவர்கள் கல்வியாண்டின் இறுதியில் தங்கள்
பிள்ளைகள் உயர் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகவும், சக மாணவர்களை
விட கல்வியிலும், திறமையிலும் தங்கள் குழந்தைகள் சிறந்தவர்களாக இருக்க
வேண்டும் என்பதற்காகவும் தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர்.
இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு “கணினி பற்றி எதுவும் தெரியாது”
என்ற நிலையை விரும்பவில்லை. உயர் கல்வியின் நவீன வசதிகள் மற்றும் போதிய
தகவல் தொழில்நுட்ப இணைய வசதி உள்ள பள்ளிகளுக்கு அவர்களின் குழந்தைகளை
அனுப்பவே விரும்புகின்றனர். தனியார் பள்ளிகள் கல்வியில் முன்னணி
வகிக்கின்றன; மேலும் அதிகமான தொகையை கட்டணமாக எடுத்துக்கொள்கின்றன.
ஏனெனில், இன்றைய நவீன கல்விமுறையில் “கணினிக்கல்வி” அதிக முக்கியத்துவம்
வாய்ந்ததாக உள்ளது. ஆனால், எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை வசதியான
தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாது என்பதே கசப்பான உண்மை. தமிழகத்தில்
இன்றுவரை கிராமப்புற மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் கணினிக்கல்வி
கிடைக்கவில்லை. இன்றுவரையில் கணினி அறிவியல், இணையம் மற்றும் தகவல்
தொழில்நுட்பம் பற்றிய அடிப்படைகளை அறியாதவர்களாகவே அரசு பள்ளி மாணவர்கள்
உள்ளனர். கல்வியில் கூட ஏன் இத்தனை பாரபட்சங்கள்..??
“கணினி மற்றும் இணையம்” ஆகியவை மாணவர்களின் படைப்புத்திறன் மற்றும்
கற்பனைத்திறனை மேம்படுத்தவதோடு மட்டுமல்லாமல் நவீன தொழில்நுட்பங்களை எளிதாக
புரிந்து கொள்ளவும் உதவுகின்றன. மாணவர்கள்தான் ஒரு நாட்டின் வருங்கால
தலைவர்கள். தற்போதைய பள்ளி மாணவர்கள்தான் எதிர்காலங்களில் ஆசிரியர்கள்,
மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் படைப்பாளிகளாவர்.
எனவே, கல்வியின் அபிவிருத்திக்கு கணினிகள், இணையம் மற்றும் அதன்
நன்மைகளைப் பற்றி ஆரம்ப கல்வியிலிருந்தே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு
கற்பிப்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.
(திரு. அகிலன் - வேலூர்).
*”கணினி ஆசிரியர்களின் முக்கியத்துவம் - பள்ளிக்கு குறைந்தது ஒரு கணினி ஆசிரியரை நியமனம் செய்வது அவசியம்”*
பள்ளிகளில், கணினி சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் அனைத்து துறை நவீன
தொழில்நுட்ப வளர்ச்சியானது இன்றைய தனியார் துறைகளின் அதிநவீன தொழில்நுட்ப
முன்னேற்றத்துடன் ஒப்பிடுகையில் மிக முக்கியமான ஒன்றாகும்.
கணினிகளை எப்படி முறையாக பயன்படுத்துவது, மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்செல்,
பவர் பாயிண்ட், இணைய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் நிரல்களை கையாள்வது
குறித்தும் வலைத்தள வடிவமைப்பு, இணையத்தை முறையாக பயன்படுத்துவது
போன்றவற்றினை பி.எட்., பயின்ற கணினி ஆசிரியர்களால் தான் மாணவர்களுக்கு
திறம்பட கற்பிக்க முடியும்.
மேலும், எவ்வாறு பல்வேறு பயன்பாடுகளைப் (Apps) பயன்படுத்துவது, எவ்வாறு
கணினி சாளர இயங்குதள நிரலைப் பயன்படுத்தி மாணவரின் கணினி அறிவை
மேம்படுத்துவது, கட்டுரைகள் (அ) கவிதைகள் எழுதும் திறன் கொண்ட மாணவர்களை
தமிழ் மொழியில் கணினியில் தட்டச்சு செய்ய பயிற்சி கொடுப்பது போன்ற
மேன்மையான கல்விப் பணிகளுக்கு கணினி ஆசிரியர் அவசியம் தேவை. கணினியில்
இடம்பெறும் கணிதம் போன்ற வகுப்புகளை மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி
பயிற்றுவிக்க மைக்ரோசாஃப்ட்-எக்செல் போன்ற பிரதான கணினி பயன்பாடுகள் கணினி
அறிவியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை மாணவர்களுக்கு எளிதில்
புரியும்படியும், தெளிவாகவும் நடத்திட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி
ஆசிரியர் இன்று அவசியமாகும்.
நவீன யுகத்தில் கணினியின் முக்கியப் பங்கு, ஒவ்வொரு துறையிலும் கணினியின்
பல்வேறு பயன்கள் என்ன என்பதை கற்பிப்பதற்கும், பள்ளிகளில் கணினி ஆசிரியர்
இன்றியமையாத ஒரு இடத்தைப் பெறுகிறார்.
இதை, நடைமுறைப்படுத்த முயற்சித்தேன். ஆனால், நடைமுறைக் கல்வியைக்
காட்டிலும் தத்துவார்த்த ரீதியாக கணிப்பொறியினைப் பற்றி தனியார் பள்ளிகளில்
மாணவர்கள் அதிகம் கற்க முடிகிறது. இதனை அரசுப்பள்ளியில் முறையாக
நடைமுறைத்திபடுத்தினால் அரசுப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும்.
மேலும், பெற்றோர்களுக்கு அரசு பள்ளி மீது உள்ள அவநம்பிக்கையும்,
அதிருப்தியும் விலகும்; இதனால், அரசுப்பள்ளிகள் சர்வதேச கல்வித்தரத்திற்கு
வெகுவாக உயரும்.
தமிழகத்தில் தற்போது அரசு பள்ளி தவிர, தனியார் பள்ளிகள் அனைத்திலும் கணினி
அறிவியல் பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு ரூ.23,000
கோடி செலவில் 27 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியதே தவிர அதை
முறையாகப் பயன்படுத்தக் கற்றுத்தரவில்லை..
(திருமதி. ஹேமாராணி - சென்னை)
*”வளர்ந்த நாடுகளில் கணினிக் கல்விக்கும், கணினி ஆசிரியர்களுக்கும் முக்கியத்துவம் தரவதற்கான காரணம்…”*
பல வளர்ந்த நாடுகள் அவற்றின் அரசு பள்ளிகளுக்கு கணினி பயன்பாடுகளையும்,
உயர்தர தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளையும் இலவசமாக வழங்கி
வருகின்றன. சிறந்த தொழில்நுட்ப கல்வியானது மாணவர்கள் சிறந்த
சிந்தனையாளர்களாகவும், படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கைத்திறன்
மிகுந்தவர்களாகவும் இருக்க உதவுகின்றது.
அமெரிக்கா, ஜப்பான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தொழில்நுட்பங்கள்,
விளையாட்டுக்கள், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம்
கொடுப்பதால்தான் இன்று உலகில் முன்னணி நாடுகளாகவும், வளர்ந்த நாடுகளாகவும்
திகழ்கின்றன. உயர்தரமான தொழில்நுட்ப கருவிகள், பள்ளிகள் மற்றும்
கல்லூரிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை தரமான முறையில் வழங்குவதால் அந்த
நாடுகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
இவ்வாறான அதிநவீன வளர்ச்சியினால் Google, Microsoft, Facebook போன்றவற்றை
உருவாக்கியவர்கள் அந்த நாடுகளில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இந்தியாவில்
இதுபோன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை இதுவரை உருவாக்க முடியவில்லையே…
ஏன்..??
வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் முன்முயற்சி
எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கணினி
ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஒரு வாய்ப்புக் கூட வழங்காமல் வேலையில்லா
ஆசிரியர்களாக உருவாக்கியுள்ளது. உயர் சம்பளம் தேவையில்லை; வாய்ப்பு மட்டும்
தாருங்கள்; பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியருக்கு மட்டும்.
(திரு. கோவிந்தன் - கோவை)
*”தமிழகமும், கணினி அறிவியல் கல்வியும்...”*
தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கல்வித்துறை இன்னும்
வளர்ச்சி அடையவில்லை என்றுதான் கூற வேண்டும். அண்டை மாநிலங்களான கேரளா,
கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் “கணினி
அறிவியல் பாடம்” இன்று இன்றியமையாத ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது. ஆனால்,
தமிழகத்தைப் பொருத்தவரை கணினி அறிவியல் என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு
இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.
கேரளாவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடத்திற்கு
“கட்டாயத் தேர்ச்சி முறை (Compulsory passing system)” நடைமுறையில் உள்ளது.
ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் இன்னும் ஒன்றாம் வகுப்பில் கூட கணினி
அறிவியல் அறிமுகப்படுத்தவில்லை என்பது பள்ளிக் கல்வியின் பின்னடைவை
சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில் கணினிக் கல்விக்கான வாய்ப்புகள் அரசு
பள்ளிகளில் சுத்தமாக இல்லை. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில்
நிரலாக்கம் (Programming), வலைத்தள வடிவமைப்பு (Web-designing), இணையம்,
தரவுதள-மேலாண்மை, டிஜிட்டல் பாடப்பிரிவுகள், ரோபோடிக்ஸ் (Robotics), etc.
போன்றவை இன்று அதி முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.
இன்றைய சூழலில், கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவை எடுத்து படித்தாலும், அங்கு
கணினி அறிவியலும் ஒரு கட்டாயப் பாடமாக இடம்பெற்றுள்ளது; இதனால்,
பள்ளிகளில் கணினியின் அடிப்படை பாடப்பிரிவுகளை (Fundamentals of Computers)
கற்காத மாணவர்கள் கல்லூரிகளில் கணினி சார்ந்த பாடங்களை பயிலும்போது,
தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலையில் கடுமையான மன
உளைச்சலுக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் உள்ளாகிறார்கள் என்பது
கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.
தகவல் தொழில்நுட்பமும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் மலிந்துவிட்ட இன்றைய
சூழலில் அவற்றை எவ்வாறு கையாள்வது, அவற்றிடமிருந்து குழந்தைகளை எப்படி
பாதுகாப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் நாம் தோல்வியடைந்துவிட்டோம்.
இல்லையெனில் “நீலத்திமிங்கலம் (BlueWhale)” போன்ற இணையம் சார்ந்த கணினி
விளையாட்டுகளுக்கு குழந்தைகளை பலிகொடுத்திருக்க மாட்டோம். இவ்வாறு, நவீன
காலத்திற்கேற்ப கல்விமுறையையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தாமலேயே பல
மாணவர்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதே அதிர்ச்சியான உண்மை.
(திரு. ராஜ்குமார் - கடலூர்).
*”தமிழகத்தில் கணினி ஆசிரியர்களின் நிலை...”*
தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்துமுடித்த பட்டதாரிகளை அரசு
பள்ளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் 40,000 வேலையில்லா பட்டதாரிகளாக
உருவாக்கியள்ளனர் நமது ஆட்சியாளர்கள். படைப்புகளை உருவாக்கும்
மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்களை நியமித்து சம்பளம் தருவதற்கு கணக்கு
பார்க்கும் தமிழக அரசு ரூ.23,000 கோடி செலவில் இலவச மடிக்கணினி
தருகின்றது. அதை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்துவதற்கு சொல்லித்தர கணினி
ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இன்றுவரையில், பள்ளிகளில் முறையான கணினி
ஆய்வகங்களும் இல்லை. இது என்ன கொடுமை..?? தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த
நிலை..??
பிரபலமான மற்றும் அரசியல் பலம் கொண்ட தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி
சார்ந்த எந்த பரிசோதனைகளும், ஆய்வுகளும் முழுமையாக அனுமதிக்கப்படாதது
கல்வியின் பாரபட்சங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் வெளிப்படையாக சுட்டிக்
காட்டுகிறது…
நவீனமும், விஞ்ஞானமும் Android, iOS போன்ற புதிய வரவுகளை நோக்கி அசுர
வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், அரசு மேல்நிலைப்
பள்ளிகளில் பயிலும் எங்கள் மாணவர்கள் இன்னும் விண்டோஸ் XP, UPS மின்சார
வசதியற்ற கணினிகள் மற்றும் “CRT” போன்ற பழமையான சாதனங்களையே
பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, மேம்படுத்தப்படாத கல்விமுறையாலும்,
கண்டுகொள்ளப்படாத கட்டமைப்பு வசதிகளாலும் தமிழகம் கல்வியில் மேலும்
பின்தங்குகிறது.
(திரு.ச. கார்த்திக் - நாமக்கல்).
*”கணினிக்கல்விக்கு வருகின்ற நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்த வேண்டுகிறோம்...”*
தமிழகத்தில் கணினிக்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி,
கல்வித்துறையின் வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் மீது முழு
கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.
“தொழில்மயமாக்கல் (Shabdkosh)” என்பது ஒரு சூத்திரம் அல்லது வெளிநாட்டு
முதலீடு மட்டுமல்ல; இந்தியாவில் பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு,
காத்திருக்கும் வேலைவாய்ப்புகளற்ற இளைஞர்களின் விகிதத்தை குறைக்கும் ஒரு
விதிமுறையும் ஆகும்.
மிகவும் வசதி படைத்தவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்றோர்களே இதன் மூலம்
அதிக லாபம் அடைகின்றனர். இதனால், ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டுமே முழுப்
பயனையும் அடைகின்றனர். இந்திய அரசாங்கத்தின் திட்டங்கள் இளைஞர்கள்
பயனைடையும் விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தமிழக அரசு
முழுமையாகச் செயல்படுத்தினால் இங்கு தமிழகத்தில் பல பட்டதாரி இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அரசின் பல திட்டங்கள் இளைஞர்களைச் சென்று சேர்வதில்லை. இதனால்தான் B.E.,
MCA., MBA., போன்ற பட்டதாரிகள் உயர்நீதிமன்றத்தின் துப்புரவு பணிக்குச்
செல்லும் அவலமான நிலையும் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.
அரசு பள்ளிகளில் உள்கட்டமைவு மற்றும் தரமான கல்வியை மேம்படுத்துவதற்கு
மத்திய அரசு கணினி அறிவியல் கல்விக்கு அதிக பட்ஜெட் நிதியை வழங்கி
வருகிறது. இது மிகவும் பெரிய விஷயம்! இதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள
வேண்டும். கல்வித்துறையிலும், கல்வியின் அமைப்பிலும் உள்ள கறுப்பு துளைகளை
அகற்றுவதன் மூலம் தமிழகம் கல்வியில் சிறப்பானதொரு வளர்ச்சியை அடைய
முடியும்.
நமது இந்திய தேசத்திலிருந்து ஊழலை அகற்றும் ஒரே நல்வழி கல்விதான்.
இன்றைய நவீன யுகத்தில் “கணினிக்கல்வி” மிகவும் முக்கியமான ஒன்றாகும்;
சர்வதேச அளவில் நமது மாணவர்களும், சமூகமும் வெற்றியடைய கணினி அறிவியல்
போன்ற நவீன பாடத்திட்டங்களை இன்றைய கல்விமுறையில் கொண்டுவருவது காலத்தின்
கட்டாயம்.
(திரு. சரவணன் - கிருஷ்ணகிரி).
தமிழகத்தில், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் மாண்புமிகு
கல்வி அமைச்சர் பாடத்திலும், பாடத்திட்டத்திலும் மாற்றத்தை கொண்டு வருவது
மட்டுமல்லாமல் கலைத்திட்டத்திலும் மாற்றத்தை கொண்டுவந்து தமிழக
பள்ளிக்கல்வியின் தரத்தை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களின் அரசுப்பள்ளிகளில் உள்ளதுபோல் “எங்கும்
கணினி!! எதிலும் கணினி!!” என்ற வாசகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று
வரை இல்லை.
இந்நிலையை மாற்றி, தமிழக பள்ளிக் கல்வித்துறையை உலக தரத்திற்கு ஈடாக
கொண்டு செல்ல மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மற்றும் மாண்புமிகு
கல்வி அமைச்சர் அவர்களும் புதிய பாடத்திட்டத்தில் “கணினி அறிவியல்” பாடத்தை
கட்டாயப்பாடமாக கொண்டுவந்து அதற்கு தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை
நியமனம் செய்ய வேண்டுகிறோம்..!!
புகைப்படம் :திரு வேலு.
செய்தித் தொகுப்பு:
திருமதி ஜமுனாமணி
நன்றியுடன் :
திரு வெ.குமரேசன்
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...