உடுமலை : ஜனநாயக தேர்தல் நடைமுறை குறித்து, இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தேர்தல் ஆணையம் சார்பில், பள்ளிகளில், வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
தேர்தல் கமிஷன் சார்பில், முழுமையான வாக்காளர்
சேர்க்கை, தேர்தல்களில், நுாறு சதவீத ஒட்டுப்பதிவு உட்பட பல்வேறு
நோக்கங்களுக்காக, விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும், 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளராக சேரவும், சேர்ந்த பிறகு,
தேர்தலில் ஓட்டளிக்கவும் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. இதற்காக,
கல்லுாரிகளில், தேர்தல் ஆணையம் சார்பில், மாணவர்கள் பங்களிப்புடன், பேரணி,
ஊர்வலம் ஆகியவை நடத்தப்படுகின்றன.
தேர்தல் கமிஷன் உத்தரவு
இது குறித்த விழிப்புணர்வை, பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு வழங்குவது,
மாற்றத்தை தரும் என கருதப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில், வாக்காளர்களாக
மாற உள்ள மாணவர்கள், நமது நாட்டின் தேர்தல் நடைமுறைகளை தெரிந்து கொள்வது
அவசியம் என்பதால், தேர்தல் ஆணையம் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்த,
உத்தரவிட்டது.
அதன்படி, 9 முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரையுள்ள மாணவர்களுக்கு, தேர்தல்
நடைமுறைகள் குறித்த, வினாடி-வினா போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன.
தேர்தல் ஆணையத்தின் முறைப்படுத்தப்பட்ட வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல்
பங்கேற்பு விழிப்புணர்வு திட்டத்தின் கீழ், இப்போட்டிகள் நடத்தப்பட்டன.
மாணவர்கள் குழுவினரிடையே ஓட்டுச்சாவடி நடைமுறைகள், வாக்காளர் பட்டியலில்
பெயர் சேர்த்தல், தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள், இந்திய தேர்தல்
ஆணையம், தேசிய வாக்காளர் தினம் உட்பட தேர்தல் நடைமுறைகள் குறித்த கேள்விகள்
கேட்கப்பட்டன.
மாணவர்கள் ஆர்வம்
ஆசிரியர்கள் கூறுகையில், 'வினாடி-வினா போட் டியில், முழுமையாக தேர்தல்
நடைமுறைகள், விதிகள் குறித்த கேள்விகளே தயார் செய்யப்பட்டிருந்தன.
மாணவர்கள், கேள்விகளுக்கு ஆர்வத்துடன் பதில் அளித்து, வாக்காளர்களாக
இணைந்து, தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்வது ஜனநாயக கடமை என்பதை தாங்கள்
உணர்ந்துள்ளதை வெளிப்படுத்தினர்', என்றனர்.
அதிகாரிகள் பார்வை
ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், இரண்டு பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டு,
மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். திருப்பூர் மாவட்ட அளவிலான
சுற்றில் வெற்றி பெறுபவர்கள், மாநில அளவிலான சுற்றுக்கு அனுப்பி வைக்கப்பட
உள்ளனர்.
உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டிகளை, திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர்
மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திருஞானசம்பந்தன், கோட்டாட்சியர்
அசோகன், தாசில்தார் தங்கவேல் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள்
பார்வையிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...