ஆண்டு தோறும், ஒரு நாள் தென் கொரியா முழுவதும் ஸ்தம்பித்து போகும். பயண
நேரம் தாமதமாகும், பங்கு சந்தைகள் தாமதமாக திறக்கும் மற்றும் விமானங்கள்
தரையிறங்கவோ, புறப்படவோ தடை செய்யப்படும். இது சிசாட் (CSAT) எனப்படும்
கல்லூரி கல்வியியல் திறன் தேர்வு நடத்தப்படும் நாள்.
இந்தாண்டு நவம்பர் 16 ஆம் தேதி இந்த தேர்வு நடத்த
திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்நாட்டின் தென் கிழக்கு கடற்கரை
பகுதியிலும், போஹாங் நகரத்திலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சிசாட்
தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இயற்கை பேரிடரால் தேர்வு நாள்
மாற்றியமைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நியாயமாக இத்தேர்வை நடத்த வேண்டும்
என்பது குறித்து யோசித்த அந்நாட்டின் கல்வி அமைச்சகம், இந்த முடிவை
எடுத்துள்ளது.
இதில் சம்பந்தப்படுவது கல்வி அமைச்சகம் மட்டுமல்ல. நில உள்கட்டுமானம்
மற்றும் போக்குவரத்து அமைச்சகம், நீதித்துறை மற்றும் உள்துறை மற்றும்
பாதுகாப்பு அமைச்சகம் போன்ற அரசாங்க அமைப்புகளும் இதில் பங்குபெறும்.
மேலும், தனியார் துறை நிறுவனங்களோடு கொரிய பங்கு சந்தை மற்றும் கொரிய
வங்கிகள் கூட்டமைப்பும் இதில் ஈடுபடுகின்றன.
ஒரு தேர்வுக்கு ஏன் இவ்வளவு முயற்சி எடுக்கப்படுகிறது?
சிசாட் என்பது உலகிலேயே மிகவும் கடுமையான தரப்படுத்தப்பட்ட சோதனைத்
தேர்வாகும். சிறந்த வேலை வாய்ப்புகள் பெற கொரியாவின் உயர்
பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர இத்தேர்வு உதவும். மாணவர்களின்
வாழ்க்கையை தீர்மானிக்கும் தேர்வாக இது கருதப்படுகிறது.
AFP
தேர்வு நாள் நவம்பர் 23 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்ட அன்று, தென்
கொரியாவின் 1180 தேர்வு மையங்களில் 59,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்
கூடினர். தேர்வு நடப்பதற்கு முன் தென் கொரியா எடுக்கும் நடவடிக்கைளின் அளவே
வேறு.
விமானங்கள் பறக்க தடை!
தேர்வுக்காக எடுக்கப்படும் தீவிர நடவடிக்கைகளில் ஒன்று, அவசர நிலை இல்லா
விமான புறப்பாடு மற்றும் தரையிறங்குதலுக்கு தடை விதிப்பது. தேர்வின் ஒரு
பகுதியான, ஆங்கிலம் கேட்கும் சோதனை, சுமார் 35 நிமிடங்களுக்கு நடைபெறும்.
அப்போது நாடு முழுவதும் இத்தடை விதிக்கப்படுகிறது. ஒருசில முறைகள்
இயக்கப்படும் இந்த ஆங்கில உச்சரிப்பிலான பேச்சை மாணவர்கள் தவறாக
புரிந்துகொள்வதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நில உள்கட்டுமானம் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் இந்த தடை அறிவிப்பை
வெளியிட்டது. ஏற்கனவே விண்ணில் பறக்கும் விமானங்கள், 3 கிலோ மீட்டர்
உயரத்திற்கு கீழ் வரமுடியாது.
பூட்டிவைக்கப்படும் தேர்வாளர்கள்!
தேர்வு குறித்து எந்த விதமான தகவல்களும் வெளிவராமல் இருக்க, யாருக்கும்
தெரியாத இடத்தில் தேர்வாளர்கள் அனைவரும் பூட்டி வைக்கப்படுகிறார்கள்.
வெளியுலக தொடர்புடன் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, தனி இடத்தில் அவர்கள்
தங்க வைக்கப்படுகிறார்கள். நெருங்கிய குடும்ப நபர் இறப்பு போன்ற அவசர
சூழ்நிலைகளில் மட்டுமே அவர்கள் வெளியே அனுப்பப்படுவார்கள். எனினும்,
குறிப்பிட்ட நேர நிபந்தனைகளுடனும், பாதுகாப்பு அதிகாரிகளுடனும் தான்
அவர்கள் வெளியே செல்ல முடியும்.
இந்தாண்டு சுமார் 700 தேர்வு ஊழியர்கள், அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியில்
இருந்து பூட்டி வைக்கப்பட்டிருந்தனர். நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறவிருந்த
தேர்வு மாற்றியமைக்கப்பட, அவர்கள் வெளிவரும் தேதியும் தாமதமானது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் அவர்கள் வெளியுலகத்துடன் தொடர்பில்லாமல்
இருந்தனர்.
'சிறப்பு நடவடிக்கை: மாணவர் போக்குவரத்து'… போலீஸ், தீயணைப்பு மற்றும் டாக்சிகள்
தேர்வு தொடங்கியபின் எக்காரணத்தைக் கொண்டும், மாணவர்கள் உள்ளே
அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே தேர்வு மையக் கதவுகள் மூடப்படும் முன்னரே,
சரியான நேரத்தில் மாணவர்கள் வந்தாக வேண்டும்.
அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான
போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆங்காங்கே நிறுத்தி
வைக்கப்படுகிறார்கள்.
Getty Images
தேர்வு நாள் காலையில், தேர்வு மையங்களுக்கு வழி தெரியாமல் குழம்பி
நிற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து காவல்துறை உதவுகிறது. கடைசி நேரத்தில்
போலீஸ் காரிலிருந்து தேர்வு மையத்திற்கு ஏதேனும் மாணவன் ஒருவன் அவசரமாக
ஓடும் காட்சியை ஒவ்வொரு ஆண்டும் பார்க்க முடியும்.
இந்தாண்டு 18,018 போலீஸ் அதிகாரிகளை கொரிய தேசிய காவல் ஆணையம் வெவ்வேறு
இடங்களில் நிறுத்தி வைத்தது. தேர்வு மையங்கள், தேர்வுத் தாள்கள் எடுத்துச்
செல்லப்படும் வழிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் அவர்கள்
இருப்பார்கள்.
மாணவர்களின் பாதுகாப்பிற்காக, நூற்றுக்கணக்கான தீயணைப்பு இயந்திரங்கள்
மற்றும் அவசர நிலை வாகனங்களை தீயணைப்புத்துறை நிறுத்தி வைத்தது.
பொதுப் போக்குவரத்து வசதிகளும் விரிவுபடுத்தப்படும். தேர்வு
மையங்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைய கூடுதல் ரயில்கள் மற்றும்
பேருந்துகள் இயக்கப்படும் என சோல் நகர மன்றம் அறிவித்துள்ளது.
மேலும் கூடுதல் எண்ணிக்கையான டாச்சிகளோடு, மாணவர்களின் அவசரகால
போக்குவரத்திற்கு நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் வாகனங்களும்
முக்கிய போக்குவரத்து தளங்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டன.
பங்கு சந்தைகள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்கு
ஒரே ஒரு வினாடி கூட, மில்லியக் கணக்கான டாலர்கள் வருமானத்தில் மாற்றம்
கொண்டுவர கூடிய நிதி சந்தையே, மாணவர்களை கருத்தில் கொண்டு தங்கள் வேலைகளை
அன்று தாமதமாக தொடங்குகிறது.
எப்போதும் காலை 9 மணிக்கு தொடங்கக்கூடிய பங்கு சந்தை, தேர்வு நாளில் 10 மணிக்கு தொடங்கும்.
தேர்வு நாளன்று மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தேர்வாளர்களுக்கு
போக்குவரத்து தேவை அதிகமுள்ளதால், எப்போதும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி
வரை இயங்கும் தென் கொரிய வங்கிகள் கூட்டமைப்பு, அன்றைய தினத்தில் காலை 10
மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும்.
தென் கொரியாவின் கல்வி அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று, பல தனியார் நிறுவனங்களும் தங்கள் வேலை நேரத்தை மாற்றியமைத்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...