வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நடத்தி முடிக்க
வேண்டுமெனவும், எனவே தேர்தல் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கலாம் என்றும்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை, அதிகளவில் பணப் பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறி தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இடைத்தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் ஆர்.கே.நகர் வேட்பாளர் மருது கணேஷ், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அதில் ஆர்.கே.நகரில் 45,000 போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், பணப் பட்டுவாடா தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையில்,' திமுகவின் இந்த இரு வழக்குகளால் இடைத் தேர்தலை நடத்த முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதிலளித்தது.
இந்த சூழ்நிலையில் இன்று ( நவம்பர் 21) சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், "50, 100 ஓட்டுக்கள்கூடத் தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன என்ற வாதம் திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் நீக்கப்பட்ட போலி வாக்காளர்களின் விபரங்கள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் , 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அதைவிடக் கூடுதலாக 45,819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தது.
திமுகவின் கோரிக்கைப்படி போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதையடுத்து உயர் நீதிமன்றம், "டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை. எனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பணியைத் தேர்தல் ஆணையம் தற்போதே தொடங்கலாம்" என்று உத்தரவிட்டுள்ளது.
ஒரு தொகுதியில் மட்டும் 45ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர் எவ்வாறு சேர்க்கப்பட்டது. எங்கே தவறு நடைபெற்றது அதனை கண்டுபிடிப்பார்களா? அதற்கு தண்டனை உண்டா? அப்படியானால் தமிழகத்தில் போலிவாக்காளர்கள் எண்ணிக்கை கண்டு பிடித்து நீக்குவார்களா?
ReplyDelete