இந்தியாவில் பொறியியல் படிப்பில் சிறந்த கல்வி நிறுவனங்களாக உள்ள
ஐ.ஐ.டி-யில் சேர்வதற்குப் பள்ளி மாணவர்கள் கடுமையாகப் போட்டி
போடுகிறார்கள். இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி-க்கள்
இருந்தாலும், அதில் தமிழக மாணவர்களின் சேர்க்கை என்பது மிகவும் குறைவு.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நுழைவது
ஆச்சர்யமாகவே பார்க்கப்படுகிறது. இதனை மாற்றியமைக்க தமிழக அரசும், பல்வேறு
அமைப்புகளும் முயற்சி செய்து வருகின்றன. தமிழக அரசு நுழைவுத்தேர்வுக்கான
பயிற்சி வழங்குவதற்கு முன்பே, ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி
வகுப்புகளைத் தன் பள்ளியில் ஆரம்பித்து முன்னோடியாக மாறியிருக்கிறார்
வழுதாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர்
திருமுருகன்.
பெரும்பாலும் நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தி வரும் வேளையில் தமிழில் கணிதம், இயற்பியல், வேதியியல் சார்ந்த கேள்விகளுக்கு விளக்கத்துடன் பயிற்சி வகுப்பு எடுப்பதுடன், அந்தப் பயிற்சியை செல்போனில் படம்பிடித்து யூ டியூப்பிலும், வாட்ஸ்அப் வழியாகவும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கவும் செய்கிறார் திருமுருகன். இந்த வீடியோவை தமிழகத்தில் உள்ள அரசு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தில் பதிந்து வருகிறார்.
"தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு அவசியமாக இருந்த
காலத்திலேயே நான் வழங்கிய பயிற்சியின் மூலம் ஐ.ஐ.டி-யிலும், அரசுப்
பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ந்தனர். நுழைவுத்தேர்வு
கைவிடப்பட்டபோது பயிற்சி வகுப்பில் மாணவர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
நீட் தேர்வின் மூலமே மருத்துவப்படிப்பில் சேர முடியும் என்ற நிலை உருவாகி
இருப்பதால் தற்போது அரசுப் பள்ளி மாணவர்களும் நுழைவுத்தேர்வுக்கான
பயிற்சியில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும்வகையில் சிறப்புப் பயிற்சி வகுப்பு வீடியோக்களையும், கேள்விகளையும் வாட்ஸ்அப், யூ டியூப்களில் பதிவு செய்து வருகிறேன். இதுவரை, யூடியூப்பில் 47 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளேன். இதையும் அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாணவர்கள் இணைய வழியே கேள்விகள் கேட்டும் விளக்கம் பெறலாம். அரசும் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்திருப்பதால் இனி, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்விலும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்விலும் தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் அதிக இடங்களைப் பிடிப்பதற்கு வாய்ப்புகள் உருவாகி வருகின்றன” என்றார் நம்பிக்கையுடன்.
இவர், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு உதவும் வகையில் ஐ.ஐ.டி
நுழைவுத்தேர்வு கணிதம் (IIT JEE Mathemstics) குறித்தும், ஏழாம் வகுப்பு
முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஐ.ஐ.டி தேர்வுக்கான
அடிப்படைகள் குறித்தும் புத்தகங்கள் எழுதி வருகிறார்.
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மேற்கொள்ள வேண்டியவை குறித்து திருமுருகன் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
"விரைவில் ஐ.ஐ.டி-யில் சேர்வதற்கான ஜே.இ.இ. தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. தயங்காமல் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஐ.ஐ.டி-யில் சேர முதல் கட்டமாக மெயின் தேர்வு எழுத வேண்டும். அதில் நிறைய
மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறும் 1.5 லட்சம் மாணவர்கள் மட்டும் அடுத்த கட்ட
அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அதில் வெற்றி பெறுபவர்களே,
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி-க்களில் உள்ள 9,700 இடங்களில்
சேர்க்கப்படுகின்றனர் என்பதால் ஜே.இ.இ முதன்மைத் தேர்விலேயே அதிக மதிப்பெண்
பெற்றிட முயல வேண்டும்.
ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வை ஒரு வருடம் தனிப் பயிற்சி பெற வேண்டும் என்றாலும்
பள்ளிப் பாடங்களை முறையாகப் புரிந்து படித்திருந்தால் முதல்
தேர்விலேயே அதிக மதிப்பெண்ணைப் பெறலாம்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை மாணவர்கள் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில்
வெற்றிபெற சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தைக் கருத்தில் கொண்டு தயாராக
வேண்டும்.
கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கேட்கப்படுகின்றன. எனவே
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கேள்விகளைப் படித்து புரிந்துகொள்ளும்
அளவுக்கு ஆங்கிலத் திறமையை மேம்படுத்திக் கொள்வது நல்லது.
நுழைவுத்தேர்வுக்கான கேள்விகள் எல்லாம் ஆப்ஜெக்டிவ் முறையில் இருக்கும்.
கேள்விக்கு நான்கு விடைகளும் பொருந்திபோவதுபோல் அமைத்திருப்பார்கள். அதில்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2018-ம் ஆண்டில் ஐ.ஐ.டி-ஜே.இ.இ (அட்வான்ஸ்) தேர்வை இணையம் வழியாக நடத்த
முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான மாதிரித் தேர்வை எழுதிப் பார்ப்பதோடு
கணினியைச் சிறந்த முறையில் இயக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. தவறான விடையை எழுதினால், ஏற்கெனவே
சரியான விடைக்கான மதிப்பெண் குறைந்துவிடும். எனவே, தெரியாத கேள்வியாக
இருந்தால் அதற்கு விடையளிக்காமல் தவிர்ப்பது நல்லது.
கேள்விகளுக்கு வேகமாக விடை அளிக்க ஷார்ட் கட் முறையினை அறிந்துகொள்வது
முக்கியம். இது மதிப்பெண்ணை அதிகப்படுத்தி வெற்றியை கைவசப்படுத்தும்.
can you give me the website or youtube link
ReplyDelete