ஏன், எதற்கு, எப்படி என்ற உலக விஷயங்கள் அனைத்தையும் ஆர்வத்துடன் அலசி
ஆராயும் மாணவர்கள் பார்க்க வேண்டிய யூடியூப் சேனல் ‘ஸ்மார்ட்டர் எவ்ரிடே’
(Smarter Everyday). டெஸ்டின் சாண்ட்லின் என்ற அமெரிக்கப் பொறியாளர்
2007-ம் ஆண்டு இந்த சேனலை ஆரம்பித்தார். யூடியூப்பின் பிரபலமாக இருக்கும்
கல்வி தொடர்பான சேனல்களில் இதுவும் ஒன்று. தற்போது சுமார் 52 லட்சம் பேர்
இந்த சேனலைப் பின்தொடர்கிறார்கள்.
இயற்பியல், உயிரியல், பொறியியல் பிரிவில் ஆர்வமிருக்கும் மாணவர்களை இந்த
சேனல் அதிகமாக ஈர்க்கிறது. ‘மீன்கள் எப்படி உணவைச் சாப்பிடுகின்றன?’,
‘தட்டான்பூச்சி எப்படி உலகைப் பார்க்கிறது’, ‘ஹெலிகாப்டர் எப்படி
இயங்குகிறது?’, ‘பூனைகளுக்குக் கீழே விழுந்தாலும் ஏன் அடிபடுவதில்லை’
என்பது போன்ற பல சுவாரசியமான விஷயங்களைச் செய்முறை விளக்கங்களுடன்
பகிர்ந்துகொள்கிறார் டெஸ்டின் சாண்ட்லின். இவர் ‘அமேசான் மழைக்காடு
ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் வெளியிட்ட தொடர் காணொலிகள் பார்வையாளர்களின்
கவனத்தைப் பெற்றிருக்கின்றன.
அமேசான் காட்டில் வாழும் உயிரினங்களின் இயக்கவியலை இந்தக் காணொலிகளில்
விளக்கியிருக்கிறார் டெஸ்டின். அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று
இயற்கையின் செயல்படுகளை கேமராவில் பதிவுசெய்து அதை ‘ஸ்லோமோஷனில்’
விளக்குவது இந்த சேனலின் சிறப்பு. இரண்டு நிமிடங்களிலிருந்து 20 நிமிடங்கள்
வரையிலான 250-க்கும் மேற்பட்ட காணொலிகள் இந்த சேனலில்
இடம்பெற்றிருக்கின்றன.
யூடியூப் முகவரி: https://www.youtube.com/channel/UC6107grRI4m0o2-emgoDnAA
இணையதள முகவரி: www.smartereveryday.com/
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...