Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த பாண்டியர், சோழர் கால காசுகள்

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் பாண்டியர்,சோழர் காலத்தை சேர்ந்த செப்பு காசுகளை கண்டெடுத்து, ஆவணப்படுத்தியுள்ளனர்.

இப்பள்ளி மாணவர்கள் விடுமுறை தினங்கள்,ஓய்வு நேரங்களில் அப்பகுதியில் உள்ள பழமையான வரலாற்று சின்னங்கள், கல்வெட்டுக்கள், பழமையான சிற்பங்கள் உள்ளிட்ட பொருட்களை ஆர்வத்துடன் கண்டுபிடித்து, ஆவணப்படுத்தி வருகின்றனர்.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த 'கச்சி வழங்கும் பெருமாள்' காசு, ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஈழக்காசுகள் ஆகியவற்றை திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் ர.சமயமுத்து, தாஜ்குமார், கு.சினேகா ஆகியோர் கண்டெடுத்துள்ளனர்.
இந்த காசுகள் குறித்து தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர், தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு தெரிவித்ததாவது: 
சமயமுத்து கண்டெடுத்த காசின், ஒரு பக்கத்தில் 'கச்சி வழங்கும் பெருமாள்', என நான்கு வரி எழுத்துக்களில் உள்ளது. மறு பக்கம் இரு மீன்கள் ஒன்றன் மேல் ஒன்று சாய்ந்த நிலையில், பெருக்கல் வடிவில் உள்ளன.
இரு மீன்களின் நடுவில் பிறை உள்ளது. இந்த காசு கி.பி.1250 முதல் 1284 வரை பாண்டிய நாட்டினை ஆண்ட முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் வெளியிடப்பட்டது. இவர் சோழநாட்டைச் சேர்ந்த கச்சி எனப்படும், காஞ்சிபுரத்தை போரில் வென்று மீண்டும், சோழ இளவரசனிடமே கொடுத்ததால், 'கச்சி வழங்கும் பெருமாள்', எனும் பெயர் பெற்றார். மன்னர் சுந்தரபாண்டியன் 'எல்லாந்தலையானான்', என்ற பெயரிலும் காசுகளை வெளியிட்டுள்ளார்.
பாண்டிய நாட்டை பேரரசு அந்தஸ்துக்கு உயர்த்திய இம்மன்னனின் கி.பி.1262 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு, திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயில் முதல் கோபுர வாயிலின் வலது பக்க சுவரில் உள்ளது. 
இக்காசு இப்பகுதியில் கிடைத்துள்ளதால். இங்கு பாண்டியர் கால காசு பயன்பாட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது.
ஈழக்காசுகள்: பஞ்சந்தாங்கியை சேர்ந்த தாஜ்குமார், தாதனேந்தலை சேர்ந்த சினேகா ஆகியோர் தங்களது கிராமங்களில் ஈழக்காசுகளை கண்டெடுத்துள்ளனர்.
இக்காசின் ஒரு பக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு பந்துகள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும், வலது பக்கம் திரிசூலம், மற்றும் விளக்கு உள்ளது.
மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் இடது கையின் அருகே தேவநாகரி மொழியில் 'ஸ்ரீ ராஜ ராஜ', என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள மனிதன் இலங்கை காசுகளில் உள்ள உருவத்தை ஒத்திருக்கிறார்.
இலங்கையை சோழர்கள் வென்ற பின்பு அந்நாட்டின் புழக்கத்திற்காக வெளியிடப்பட்ட ஈழக்காசு, முதலாம் ராஜ ராஜ சோழன் காலம், முதலாம் குலோத்துங்க சோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. இக் காசு பொன், வெள்ளி, செம்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன ஈழக்காசு, ஈழக்கருங்காசு எனப்படுகிறது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலை, ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினம், களிமண்குண்டு ஆகிய கிராமங்களில் நடத்திய அகழாய்வில் இக்காசுகள் கிடைத்துள்ளன. 
திருப்புல்லாணி பகுதியிலும் இக்காசுகள் கிடைத்துள்ளதால், இலங்கையின் பயன்பாட்டுக்காக சோழர்கள் ஆளுகையின் கீழ் இருந்த பாண்டிய நாட்டுப்பகுதிகளிலும்,புழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகிறது, என அவர் தெரிவித்தார்




3 Comments:

  1. அருமையான செயல். மாணவர்கள் மிகச்சிறந்த அறிவைப் பெறவும் ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்கப்படுத்தவும் முயலும் ஆசிரியருக்கு வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா

      Delete
    2. மிக்க நன்றி ஐயா

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive