தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் இணையதளம் வழியாக பாலிடெக்னிக்
மாணவர்களின் கணக்கு, இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை 720 பகுதிகளாக
பிரித்து வீடியோவாக எடுத்து யூடியுப்பில் பதிவேற்றம் செய்ய
திட்டமிடப்பட்டது.
அதில்
முதல்கட்டமாக 83 வீடியோக்கள் யூடியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்கும் வசதியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி
அண்ணா பல்கலைகழகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை
அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் உயரதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர்.
கே.பி.அன்பழகன் இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்கும் வசதியை தொடங்கி
வைத்தார். DOTE, பாலிடெக்னிக் என்று யூடியுப்பில் பதிவு செய்து இந்த
வீடியோக்களை மாணவர்கள் பார்க்கலாம். நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர்
கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
அண்ணா பல்கலைகழகத்தில் துணைவேந்தரை நியமிப்பதற்கான பணிகள் நடந்து
வருகின்றன. புதிய துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்கும் பணிகள் நடந்து
வருகிறது. எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.1,670 ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக அந்த தொகை கல்லூரிகளுக்கு
அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதற்கான
ஆவணங்கள் சரிபார்த்து இனிமேல் தான் வழங்கப்படும். ஏற்கனவே விண்ணப்பித்த
எல்லா மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அரசு நிகழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம்.
தேனியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கலாம். அதுதொடர்பாக அரசுத்தரப்பில்
எந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
நியாயமான முறையில் எங்களுக்கு வந்து சேர வேண்டியது வந்து சேரும். இரட்டை
இலை சின்னம் விவகாரத்தில் அதிக எண்ணிக்கையில் பொதுக்குழு உறுப்பினர்கள்
எங்களுடன் உள்ளனர். ஆகவே தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து, சரியான முறையில்
தீர்ப்பு வழங்கும்பட்சத்தில் சின்னம் எங்களுக்கு வந்து சேரும் என்று
நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...