Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு; கருத்துகளை பகிர தமிழக அரசு அழைப்பு

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளார்.
பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (20.11.2017) தலைமைச் செயலகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை வெளியிட்டார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தினை மாற்றியமைக்கும் அரசாணையில் மாணவர்களின் கற்றலை படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல், தேர்வு முறைகளை மாற்றியமைத்தல், அறிவியல் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணரச்செய்தல், மாணவர்கள் தமிழர் தம் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை இலக்கியம் குறித்த பெருமித உணர்வை பெறச் செய்தல் ஆகியன வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் கலைத்திட்ட வடிவமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு புதிய கலைத்திட்ட வடிவமைப்பு 2017 உருவாக்கம் தொடர்பாக 20.7.2017 முதல் 22.7.2017 வரை மூன்று நாட்கள் பல்வேறு துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 2000 நபர்கள் பங்கு பெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கணிதம் மற்றும் அறிவியல், மொழி மற்றும் கலைப்பிரிவு பாடங்கள், மதிப்பீட்டு முறை வடிவமைப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய புலங்கள் சார்ந்து கலைத்திட்ட வடிவமைப்பு துணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
தமிழ்நாடு புதிய கலைத்திட்ட வடிவமைப்பு 2017 தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கல்வி நிறுவன நிர்வாகிகள் ஆகியோர்களின் கருத்துகளை அறியும் வகையில் மண்டல அளவில் சென்னை, கோவை, தஞ்சாவூர், மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பெற்று அக்கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.
‘கருத்தறியும் பெட்டி மூலம் பெறப்பட்ட கருத்துகள்’
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கருத்தறியும் பெட்டி வைக்கப்பட்டு பள்ளி அளவில் பெறப்பட்ட கருத்துக்கள், மாவட்ட அளவில் தொகுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நிலை ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கருத்தறியும் கூட்டம் நடத்தப்பட்டு கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.
கலைத்திட்ட வடிவமைப்புக்குழு பல்வேறு நிலைகளில் தொடர்புடைய துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசித்து கலைத்திட்ட வடிவமைப்பில் இடம் பெற வேண்டிய கருத்துகளைப் பெற்று, அக்கருத்துகள் கலைத்திட்ட வடிவமைப்புக்குழுவில் விவாதிக்கப்பட்டு, தமிழ்நாடு புதிய கலைத்திட்ட வடிவமைப்பு 2017 தொடர்பாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தகவல் தொடர்பு தொழில் நுட்பம் ஆகிய பாடவாரியாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
'பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களுடன் ஒப்பீடு'
தேசிய அளவில் மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் பாடத்திட்டம், பல்வேறு மாநில வாரியங்களின் பாடத்திட்டங்கள் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களை தமிழ்நாட்டில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் பாடத்திட்டத்தோடு ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டது. வகுப்பு வாரியாக, பாட வாரியாக துறை சார்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பாடவல்லுநர்கள் ஆகியோர் கலந்து கொண்ட பயிலரங்கம் நடத்தப்பட்டு அதில் பாடத்திட்ட ஒப்பீட்டு அறிக்கை விவாதிக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டிய கருத்துகள் ஆலோசிக்கப்பட்டு வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
'எஸ்சிஇஆர்டி இணையதளத்தில் வெளியிடப்படும்'
கலைத்திட்ட வடிவமைப்பு குழு வரைவு அறிக்கை மற்றும் வரைவு பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டிய விவரங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டு கருத்துரைகள் பெறப்பட்டு வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வரைவு பாடத்திட்டம் வகுப்பு வாரியாக, பாடவாரியாக, www.tnscert.org என்ற இணையதளத்திலும் வெளியிடப்படவுள்ளது.
தேசிய பாடத்திட்டங்களுக்கு நிகராக…
இதர மொழிப்பாடங்களுக்கான வரைவு பாடத்திட்டம் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகள் பெறப்பட்டு இறுதி செய்யப்பட்டு இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும். தற்போது வெளியிடப்படும் வரைவு பாடத்திட்டம் தேசிய அளவில் பிற பாடத்திட்டங்களுக்கு நிகராகவும், நம் மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும் போது பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று இறுதி செய்யப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் பெற வேண்டிய கற்றல் அடைவுகளை அடிப்படையாகக்கொண்டு பாடத் துணை தலைப்புகள் இடம் பெறும். மேலும், மாணவர்களின் சிந்தனையை தூண்டுதல், அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், தொடர்புடைய துறைகளில் சமீப கால தொழில் நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட ஆர்வமூட்டும் வகையிலான விவரங்களும் புதிய மதிப்பீட்டு முறையும் இடம் பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்து கேட்பு
தற்போது வெளியிடப்படும் பாடத்திட்டத்தினை உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் படித்துப்பார்த்து, தாங்கள் தெரிவிக்க வேண்டிய கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை இணைய வழியே பதிவேற்றம் செய்திடலாம். மேலும், கடிதம் வாயிலாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு பெறப்படும் கருத்துகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive