லக்னோ: முஸ்லிம்களின், மதரசா கல்வி முறையை முற்றிலும் மாற்றி,
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவன பாடங்களை அறிமுகம் செய்ய, உ.பி., மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார்.
இம்மாநிலத்தில், முஸ்லிம்களுக்கு, பிரத்யேக கல்வி மையங்களாக, மதரசாக்கள்
விளங்குகின்றன. இங்கு, இஸ்லாம் மதம் தொடர்பான வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
முஸ்லிம் மாணவர்கள் வேலை வாய்ப்புகளை பெறும் வகையிலும், நாட்டின் பிற கல்வி
மையங்களில் கற்பிக்கப்படும் பாடங்களை போன்று, தரமான கல்வியை புகட்டும்
வகையில், மதரசா கல்வி முறையை முற்றிலும் மாற்றி, என்.சி.இ.ஆர்.டி., பாடத்
திட்டங்களை அறிமுகம் செய்ய, உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கேற்ப, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை, உ.பி., மாநில, மதரசா வாரியம் துவங்கி உள்ளது.
இது குறித்து, உ.பி., மதரசா ஷிக்சா பரிஷத், பதிவாளர், ராகுல் குப்தா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
மதரசாக்களில் கல்வி முறையை தரமானதாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அறிவியல், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு,
பாட புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதரசாக்களில் படித்து முடிக்கும் மாணவர்கள், ஆலிம் அல்லது மவுல்வி
எனப்படும், முஸ்லிம் மதம் சார்ந்த பொறுப்புகளை வகிப்பது வழக்கம்.
இவற்றுக்கு, குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.
என்.சி.இ.ஆர்.டி., பாட திட்டம் புகுத்தப்பட்டால், அவர்கள், பிற மாணவர்களை
போன்று, சிறந்த வேலை வாய்ப்புகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...