நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியத்
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவை வாயிலான வருவாய் 25.49 சதவிகிதம்
சரிந்துள்ளதாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் செப்டம்பர் 28ஆம் தேதியன்று
வெளியிட்டுள்ள அறிக்கையில், “2016ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களின் வருவாய் ரூ.53,383.55 கோடியாக இருந்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் மேற்கூறிய காலகட்டத்தில் வருவாய் 25.49 சதவிகிதம் சரிந்து, ரூ.39,777.55 கோடியாக உள்ளது. மேலும், தொலைத் தொடர்புச் சேவைக்காக அரசு பெறும் வருவாயும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் ரூ.3,361 கோடியாக இருந்த உரிமங்களுக்கான கட்டணத் தொகை இந்த ஆண்டில் ரூ.3,261 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது உரிமம் வாயிலாக அரசுக்குக் கிடைக்கும் வருவாயானது காலாண்டு வாரியாக (-) 2.99 சதவிகிதமும், வருடாந்திர வாரியாக (-) 24.42 சதவிகிதமும் குறைந்துள்ளது.
அதேபோல, தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிகர வருவாயும் ரூ.73,344.66 கோடியிலிருந்து 11.53 சதவிகிதம் சரிந்து ரூ.64,889.47 கோடியாகக் குறைந்துள்ளது. எனினும், காலாண்டு அடிப்படையில், நிகர வருவாய் 2.49 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்புச் சந்தையில் அறிமுகமானதிலிருந்தே பிற நெட்வொர்க் நிறுவனங்கள் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் வருவாய் இழப்பு பெருமளவில் ஏற்பட்டுள்ளது.
So the consumers become the gainers
ReplyDelete