ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாதுக்கு அருகில் உள்ள யாதாத்ரி கோவிலை,
1,800 கோடி ரூபாயில், திருமலை போல் மாற்றுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு
ஈடுபட்டுள்ளது. தெலுங்கானாவில், முதல்வர், சந்திரசேகர ராவ் தலைமையிலான
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது.
ஆந்திரா பிரிக்கப்பட்டு, தெலுங்கானா தனி மாநிலம் அமைத்த போது, உலகின்
பணக்கார கோவில்களில் ஒன்றான திருமலை, ஆந்திராவுடன் இணைந்தது. பல்வேறு
விஷயங்களில் இரு மாநிலங்களுக்கும் இடையே பலத்த போட்டி இருந்து வருகிறது.
இந்நிலையில், தலைநகர் ஐதராபாதுக்கு அருகில் உள்ள, புராதன நரசிம்மர்
கோவிலான, யாதாத்ரி கோவிலை மேம்படுத்த, 1,800 கோடி ரூபாய் செலவில்,
தெலுங்கானா மாநில அரசு, புதிய திட்டத்தை வகுத்துள்ளது. மொத்தம், 11 ஏக்கர்
நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கோவிலில், ஏழு கோபுரங்கள், 100 அடி உயர
முக்கிய வாயிற் கதவு உள்ளிட்ட வசதிகளுடன் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன.
இதைத் தவிர, அருகில் உள்ள எட்டு மலைகள் மற்றும் வனப்பகுதிகளையும் சேர்த்து,
யாதாத்ரி கோவிலுக்கு பக்தர்களை அதிகளவில் ஈர்க்க, மாநில அரசு
திட்டமிட்டுள்ளது.
கோவில் வளாகத்துக்கு அருகில் உள்ள, 1,400 ஏக்கர் நிலப்பரப்பில் பக்தர்கள்
தங்குமிடம், பல அடுக்கு வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட
உள்ளன.
கோவிலை புனரமைக்கும் பணியில், 500க்கும் மேற்பட்ட சிற்பிகள் ஈடுபட்டு
வருகின்றனர். முதல் கட்டப் பணிகளை, 2018, மே மாதத்தில் முடிக்க
திட்டமிடப்பட்டுள்ளது. அருகில் உள்ள மலை மற்றும் வனப்பகுதிகளில், நான்கு
வழி சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் இந்த
திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன.'ஆந்திராவுடன் போட்டி போடுவதற்காக, மக்களின் வரிப்பணம்
வீணடிக்கப்படுகிறது. பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கு கடன் வாங்கும்
நிலையில் மாநில அரசு உள்ளபோது, இந்த திட்டம் தேவையில்லாதது' என, பலர்
கருத்து தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...