Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

“ஏமாற்றிவிட்டார் எடப்பாடியார்!” - சம்பள கமிஷன் அறிவிப்பால் கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள் - ஜீனியர் விகடன் நாளிதழ் கட்டுரை

தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அடுத்தடுத்து நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

‘இனி அதிகபட்ச ஊதியம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம்,
வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு படிகளிலும் அதிகபட்ச உயர்வு, ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்வு’ எனச் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதைத் தீபாவளிப் பரிசாக நினைத்து அறிவித்தார் முதல்வர். சமூக வலைதளங்களிலும் இந்தச் சம்பள உயர்வு பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ‘‘இது நாங்கள் எதிர்பார்த்தது இல்லை. எங்களுக்குத் தீபாவளி தித்திக்கவில்லை’’ என்கின்றன ஊழியர் சங்கங்கள்.

‘‘நீதிமன்றம் தலையிட்ட பிறகு ஏற்பட்ட நிர்பந்தத்தினால் ஊதிய மாற்றத்தை முதல்வர் அறிவித்தார். ஆனால், இந்த அரசாங்கம் ஏதோ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்மீது அதீத அக்கறைகொண்டு, தானாக முன்வந்து ஊதிய மாற்றத்தைத் தந்தது போலத் தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார் முதல்வர்’’ என்று குமுறுகிறார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான மு.அன்பரசு. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘அரசு ஊழியர்களுக்கு இரண்டு மடங்குச் சம்பள உயர்வு கொடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்களே?’’

‘‘அது முற்றிலும் தவறு. உதாரணமாக, ஓர் அலுவலக உதவியாளர் இப்போது மாதாந்திர மொத்த ஊதியம் ரூ.21,792 வாங்குகிறார் என்றால், இனி அவர் ரூ.26,720 வாங்குவார். அவருக்குக் கூடுதலாக ரூ.4,928 கிடைக்கும் என்பதுதான் உண்மை. இப்படி இளநிலை உதவியாளருக்கு 9,549 ரூபாய் வரை கூடுதலாக கிடைக்கும். சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.2,910 ரூபாயும் சத்துணவு சமையலருக்கு 2,118 ரூபாயும் கூடுதலாகக் கிடைக்கும். இந்தச் சம்பளத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான அரசுப் பணியாளர்கள் இருக்கிறார்கள். இந்த ஊதிய உயர்வெல்லாம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் திருத்திய ஊதிய உயர்வு. இது எங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது.’’

‘‘சில படிகளைத் தவிர அனைத்துப் படிகளும் 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறியிருக்கிறாரே?’’

‘‘மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்குவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு, குறைந்தபட்ச ஊதியம், வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுத் தொகை, குறைந்தபட்ச ஓய்வூதியம் போன்ற பல இனங்களில் மத்திய அரசு ஊழியர்கள் பெறுவதைவிட குறைவான தொகையை நிர்ணயித்துள்ளது. இப்போதும் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் பல்வேறு சலுகைகளில் சிலவற்றைக்கூட தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்காமல் புறக்கணித்துள்ளது. இது, தமிழக அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம். மக்கள் நலனிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனிலும் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறும் இந்த அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தையும் படிகளையும் வழங்க வேண்டும்.’’

‘‘குறைந்தபட்ச அடிப்படை ஊதியமும் குறைந்தபட்ச ஓய்வூதியமும் மத்திய அரசுக்கு இணையானதாகத் தரப்பட்டுள்ளது என்று முதல்வர் அறிவித்துள்ளாரே?’’

‘‘அடிப்படை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மத்திய அரசில் ரூ.18,000 ஆக உள்ள நிலையில், மாநில அரசின் ஊழியர்களுக்கு ரூ.15,700 ஆக நிர்ணயித்துள்ளார்கள். அதேபோல் மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.7,850 என்று நிர்ணயித்து இருக்கிறார்கள். இதுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியமா?’’

‘‘கடந்த 6-வது சம்பள கமிஷன் ஊதிய முரண்பாடுகள் குறித்து நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டனவா?’’

‘‘இல்லை. ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுவிடம் சங்கங்கள் வைத்த கோரிக்கைகளில் முதன்மையானது, ‘2008-ம் ஆண்டு அறிவித்த ஊதிய மாற்றத்தினால் எழுந்த முரண்பாடுகளைச் சரிசெய்த பின்னரே 2016-ம் ஆண்டுக்கான ஊதிய மாற்றத்தை அறிவிக்க வேண்டும்’ என்பதாகும். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் முதல்வரிடமும், அலுவலர் குழுவிடமும் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்தும் முன்னர், அந்த ஊதிய முரண்களைச் சரி செய்யவேண்டும்.’’

‘‘மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல 7-வது சம்பள கமிஷனின் திருத்திய ஊதியத்தின் நிலுவைத் தொகை உங்களுக்குத் தரப்பட்டுவிட்டதா?’’

‘‘இல்லை. 2014-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் சட்டமன்றத்தில் 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வாசித்தபோது, ‘7-வது சம்பள கமிஷன் நிலுவைத்தொகை உடனே வழங்கப்படும்’ என்று அறிவித்தார். ஆனால், இப்போது தரவில்லை. ‘இந்தப் புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப் பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன்’ எனச் சாமர்த்தியமாக அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஊதிய நிலுவைத் தொகையை ரொக்கமாகப் பெற்றனர். ஆனால், 2016 ஜனவரி முதல் புதிய ஊதிய உயர்வு அமலானாலும், 2017 செப்டம்பர் வரை 21 மாதங்களுக்கான ஊதிய நிலுவைத் தொகையை அரசு பறித்துக்கொண்டுள்ளது. உண்மையிலேயே இது ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும் அரசு என்றால், இந்த நிலுவைத் தொகையை மத்திய அரசு ரொக்கமாக வழங்கியது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.’’

‘‘அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?’’

‘‘அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நீதிமன்றம் அரணாக உள்ள நிலையில், ஊதிய மாற்றம் ஏமாற்றத்தை அளித்துள்ளது என அரசுக்குத் தெரிவிப்பதற்காக முதலில் விளக்கக் கூட்டம் நடத்துகிறோம். வரும் 23-ம் தேதி திங்கள்கிழமை, உயர் நீதிமன்றத்தில் ஊதிய மாற்றம் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஊதிய மாற்றத்தில் அரசு செய்துள்ள குறைபாடுகளை அப்போது சுட்டிக்காட்டி, அதற்கான உரிய உத்தரவுகளையும் உயர் நீதிமன்றத்தின் மூலம் பெறுவதே ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும்.’’

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: கே.ஜெரோம்

நன்றி ; ஜீனியர் விகடன்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive