ஆன்லைனில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் பழக்கமுள்ளவர்கள் அதனை தவிர்ப்பதே உங்கள் பார்ஸுக்கு நல்லது என்கிறது நாட்டு நடப்புகள்.
ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது என்பது பலருக்கும் பிடித்த விஷயமாக இருக்கலாம். சொல்லப்போனால் அதுவே தவறுதான். ஏன் எப்படித் தவறாகும்.. எத்தனை சலுகைகள், மற்ற பொருட்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு. வீட்டுக்கே வந்து டோர் டெலிவரி செய்யும் வசதி. இதில் என்ன குறை கண்டீர்கள் என்று கேட்கலாம்.
எல்லாம் சரிதான். ஆனால், ஆன்லைன் ஷாப்பிங்கில் மின்சாதன, செல்போன்களைத் தவிர்த்து, நீங்கள் பார்க்கும் பொருளின் தரமும், வாங்கிய பொருளும் பல நேரங்களில் ஒன்றாக இருப்பதில்லை. ஆன்லைனில் வாங்கினேன் என்று அலட்டிக் கொள்ளலாமே தவிர, நேரடியாக துணியோ பொருளோ பார்த்து பார்த்து வாங்குவது போல் அமையாது.
சரி முடியாதவர்கள், நேரமில்லாமை போன்ற பல விஷயங்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் வரப்பிரசாதமாகவே இருக்கிறது. அதில் தவறில்லை.
ஆன்லைனில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்வது என்றால் நிச்சயம் அது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அதற்காக ஆன்லைன் ஷாப்பிங்கே பாதுகாப்பற்றது என்று நினைக்கவேண்டாம். ஆன்லைனில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது தான் ஆபத்து என்கிறோம்.
முதல் காரணம் என்னவென்றால்...
ஒருவரிடம் இரண்டு வகையான அட்டைகள் இருக்கும். ஒன்று டெபிட் கார்டு, மற்றொன்று கிரெடிட் கார்டு. இரண்டைக் கொண்டுமே ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம். ஆனால் ஒரே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதுதான் கிரெடிட் லிமிட் என்ற அந்த இரட்டை வார்த்தை.
டெபிட் கார்டில் இந்தக் கட்டுப்பாடு இல்லை. அதாவது உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும் வரை உங்களால் ஆன்லைனில் பொருட்கள் வாங்க முடியும். ஆனால், கிரெடிட் கார்டில் அப்படி இல்லை. அதற்கென்று ஒரு தொகை அளவு இருக்கும்.
இந்த இடத்தில்தான் ஒரு வில்லங்கம் இருக்கிறது. அதாவது, ஆன்லைன் ஷாப்பிங் மூலம் உங்கள் டெபிட் கார்டு விவரம் திருடப்பட்டால் நீங்கள் இழப்பது, உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம்தான். அது உங்களுக்கு இழப்பாக இருக்கலாமேத் தவிர பெரிதாக எந்த சிக்கலையும் ஏற்படுத்திவிடாது. ஆனால், கிரெடிட் கார்டின் விவரம் திருடப்பட்டால் நீங்கள் இழப்பது அந்த அட்டையின் உச்ச வரம்புத் தொகையாகக் கூட இருக்கலாம். அதற்கு நீங்கள் பொறுப்பாவீர்கள். கடன்காரராக மாறும் வாய்ப்பும் உண்டு.
இரண்டாவது காரணம் இதுதான்..
உங்கள் கிரெடிட் கார்டில் இருக்கும் உச்சவரம்புத் தொகை உங்கள் பணமல்ல. எப்போது நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருள் வாங்குகிறீர்களோ, அப்போது நீங்கள் உங்கள் வங்கியின் பணத்தைப் பயன்படுத்துகிறீர்கள். ஒரு பொருளை வாங்குவதால் நீங்கள் அப்பட்டமாக கடன்காரர் ஆக்கப்படுகிறீர்கள். கடனை திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒருவேளை பணத்தைக் கட்டத் தவறினால், அதற்கு அபராதமும், வட்டியும் வசூலிக்கப்படலாம். அதோடு, ஒரு மோசடியாளராகவும் உங்கள் சிபில் ஸ்கோரில் உங்கள் மதிப்பும் குறையும்.
அதே சமயம், உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு திருடப்பட்டோ அல்லது தகவல் திருடப்பட்டோ பிறரால் பயன்படுத்த நேரிடும் போது அதற்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள். உங்கள் வங்கிதான் பொறுப்பேற்க வேண்டும்.
உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மற்றவர்களால் பயன்படுத்தப்பட்டது குறித்து வங்கியில் புகார் அளித்தால், தகவல் எப்படி திருடப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். விசாரணையில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டால், உங்கள் பணம் திரும்ப செலுத்தப்படும். இதில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இடையே என்ன வித்தியாசம் என்றால், டெபிட் கார்டில் உங்கள் பணம் களவுப் போகிறது - வங்கியில் புகார் அளிக்கிறீர்கள் - புகார் உண்மை என்று தெரிகிறது - உங்கள் பணம் திரும்ப செலுத்தப்படுகிறது. அல்லது செலுத்தப்படவில்லை. போனது அந்த தொகை மட்டுமே. ஆனால் கிரெடிட் கார்டில் முறைகேடு நடக்கும் போது உங்கள் சொந்தப் பணம் திருடு போகவில்லை - வங்கியில் புகார் - உங்கள் புகார் நிராகரிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம் - நீங்கள் செலவிடாதத் தொகைக்கு வட்டியும் முதலுமாக நீங்கள் செலுத்த வேண்டியது வரலாம்.
இதனால், நீங்கள் செலவிடாதத் தொகைக்கு வட்டியும் முதலுமாக செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். எனவே, இழப்பது என்பது இழப்பாகவே இருக்கலாம். இழப்புக்கும் வட்டிக் கட்டும் நிலை கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது நேரிடும் வாய்ப்பு அதிகம்.
எனவே, ஆன்லைன் ஷாப்பிங்கின்போது கிரெடிட் கார்டு பயன்பாட்டை கூடிய வரை தவிர்ப்பது நலம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...