தீபாவளி ஒருநாள் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகை அல்ல. ஆறுநாட்கள்
கொண்டாடப்படுவதாகும். முதல்நாள் பசுவிற்கு வழிபாடு செய்யப்படுகிறது.
வேனா நாட்டு அரசனின் மகனான "பிரித்து", பூவுலகு முழுவதும் முடிசூட்டி ஆண்ட மிகப்பெரிய சக்ரவர்த்தி. இவர் விஷ்ணுவின் அவதாரம் எனவும் சொல்லப்படுகிறது.
வேனா மன்னர் காலத்தில் கடுமையான பஞ்சம் இருந்ததாகவும், பிரித்து சக்ரவர்த்தி காலத்தில் பூமித்தாய் பசுவின் வடிவம் கொண்டு தனது பாலை கொடுத்து மக்களுக்கு பசியாற்றி அவர்களைச் செழிப்புற செய்ததாகவும், அவர் காலத்தில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. பூமித்தாய்க்கு வழிபாடு செய்யும் விதமாக பசுவிற்கு வழிபாடு செய்வது முதல் நாள் கொண்டாடப்படுகிறது.
தீபாவளியின் இரண்டாம் நாள்தான் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதியில் கொண்டாடப்படும். இந்த நாளை "தன்டேராஸ்" எனக் கூறுவார்கள். தங்கம் மற்றும் பிற வடிவில் சொத்து வாங்க இந்த நாள் மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் கடவுள்களின் மருத்துவரான தன்வந்திரியின் பிறந்த நாளாகும். தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் நல்ல ஆரோக்கியத்தை அருள, கடவுளை வணங்குவதற்கான மங்களகரமான நாளாகவும் இது கருதப்படுகிறது.
தீபாவளியின் மூன்றாம் நாள், நரக சதுர்தசி என அழைக்கப்படும். கார்த்திகை மாதத்தில் கிருஷ்ணபட்சத்தின் 14-வது நாள்தான் சதுர்தசி. இதனை நரக் சதுர்தசி என்று கொண்டாடுகின்றனர். அன்று தான் நரகாசுர வதம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரத்யோஷபுரம் என்னும் நாட்டை ஆண்ட நரகாசுரன் தன் நாட்டு மக்களை மிகவும் துன்புறுத்திவந்தான். இதனால் இந்நாட்டு மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வந்தார்கள். அவன் வாங்கிய வரத்தின்படி கிருஷ்ணரின் மனைவி சத்யபாமாவினால் கொல்லப்பட்டு, நாட்டு மக்களை நரகாசுரனின் கொடுமையில் இருந்து விடுவித்த தினம் மூன்றாம் நாள் பண்டிகையாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை நினைவு கூறும் வகையில் வீடுகளில் தீய சக்திகள் அண்டாமல் இருக்க வீட்டை ரங்கோலி கோலத்தாலும், விளக்குகளாலும் அலங்கரிப்பார்கள்.
தீபாவளி அன்று நான்காம் நாள், விநாயகரையும், லட்சுமியையும் ஒன்றாக வழிப்படுவது மரபாகும். லட்சுமிதேவியை வரவேற்க, வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது மரபு. தீபம் என்பது லட்சுமி கடாட்சம் ஆகும். லட்சுமிதேவி, செல்வச்செழிப்பிற்கும், வளத்திற்கும் கடவுள். அதேபோல், விநாயகர் அறிவாற்றலுக்கு கடவுள். மக்கள் செழிப்பையும், அறிவாற்றலையும் பெறுவதற்காக இவ்விருவரையும் ஒன்றாக இந்நாளில் வழிப்பட்டு வருகின்றனர்.
தீபாவளியின் ஐந்தாம் நாள் கோவர்தன் பூஜை. கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கிப் பிடித்து நிறுத்தியதை நினைவு கூரும் வகையில் இந்தப் பூஜையை காலங்காலமாக மக்கள் செய்து வருகின்றனர். மனிதர்களையும், கால்நடை கூட்டங்களையும் வெள்ளத்தில் இருந்தும், மழையில் இருந்தும் காப்பாற்ற கோவர்த்தன மலையை கிருஷ்ண பரமாத்மா தூக்கியதைக் குறிப்பதே இந்த நாளாகும். கோவர்த்தன பூஜை வட இந்தியர்கள் கொண்டாடுகின்றனர். கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற தென்னக மாநிலங்களில் இந்த ஐந்தாம் நாளை "பாலி பட்யமி" என அழைப்பார்கள். இந்த நாளில் தான் விஷ்ணு பகவான் அசுர அரசனான பாலியை அழித்துள்ளார். மராத்தியர்கள் இந்த நாளை "நவ தியாஸ்" அல்லது "புதிய தினம்" என அழைக்கிறார்கள்.
ஆறாவது நாளை "பாய்துஜ்" எனவும் அழைக்கிறார்கள். சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான அன்பை நினைவுப்படுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வங்காள நாட்டை சேர்ந்தவர்கள் இந்த நாளை "பாய் போட்டா" எனவும், குஜராத்தியர்கள் இந்த நாளை "பாய் பிஜ்" எனவும் அழைப்பார்கள். இன்றைய தினம் சகோதரர்கள் தங்களது சகோதரிகளின் இல்லங்களுக்குச் சென்று அவர்கள் நலம் விசாரிக்கும் தினமாக கடைப்பிடிக்கின்றனர். சகோதரிகளும் தங்களது சகோதரர்களின் நலன், வெற்றிக்காகப் பூஜைகள் செய்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...