தமிழகம் உட்பட, தென் மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற உணவான, இட்லி, உலகம் முழுவதும் விரும்பப்படும் உணவாக உருவெடுத்து வருகிறது.
தமிழகத்தில், பெரும்பாலான வீடுகளில், விரும்பி உண்ணப்படும் உணவாக, இட்லி திகழ்கிறது. இட்லியும், அதனுடன் சாம்பார், சட்னியும், பாதுகாப்பான, உடலுக்கு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது.இதுகுறித்து, சென்னை, தாஜ் கோரமண்டல் ஓட்டல், தலைமை சமையலர், சுஜன் முகர்ஜி கூறியதாவது:
இட்லியின் பிறப்பிடம், தமிழகம் அல்லது கர்நாடகாவாக இருக்கலாம் என்றும், எட்டாம் நுாற்றாண்டிலேயே, இட்லி இருந்ததற்கான குறிப்புகள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.ஆனால், இட்லி, இந்தோனேஷியாவில், சாப்பிடப்படும், வேக வைத்த ஒரு வகை உணவில் மாற்றம் செய்யப்பட்டு உருவானதாக, தகவல்கள் கூறுகின்றன.
இந்தோனேஷியாவின் சில பகுதிகளை ஆண்ட, ஹிந்து மன்னர்கள், இட்லி போன்ற உணவை கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது.இட்லி, பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் விரும்பி சாப்பிடப்படும் உணவாக உருவெடுத்து வருகிறது. அதனால், மேலும் பல தலைமுறைகளுக்கு, இட்லியின் ஆதிக்கம் இருக்கும் எனத் தெரிகிறது.
காஞ்சிபுரம் இட்லி, ராமசேரி இட்லி, மல்லிப்பூ இட்லி, பொடி இட்லி, சாம்பார் இட்லி, இட்லி உப்புமா என, பல பெயர்களில் இட்லி தயாரிக்கப்படுகிறது. எல்லா வகை இட்லிகளும், வேகவைக்கும் முறையில் உருவாகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், மாதுங்கா பகுதியில் உள்ள, கபே மெட்ராஸ் உணவகத்தின் உரிமையாளர், தேவவ்ரத் காமத் கூறியதாவது:இட்லி மாவில், நல்ல பாக்டீரியாக்கள் உருவாவதால், சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதனால், உடல் நலம் குன்றியவர்களுக்கு, இட்லியை உணவாக தரும்படி, உணவு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எல்லாருக்கும், மிகவும் பாதுகாப்பான உணவு, இட்லி.இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில், வைக்கம் நகரைச் சேர்ந்த இந்திரா நாயர் கூறுகையில், ''கேரளாவில், பலா இலைகளை வைத்து, வேகவைக்கப்படும் இட்லி தயாரிக்கப்படுகிறது. ''இந்த வகை இட்லி, பல நாட்களுக்கு கெடாது. சபரிமலை போன்ற கோவில்களுக்கு நீண்ட நாள் பயணமாக செல்பவர்கள், இந்த இட்லிகளை எடுத்து செல்வது வழக்கம்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...