காரைக்குடி:சாதிக்க
திறமை இருந்தும் சாதனம் இல்லாததால், தேசிய அளவில் வெற்றி பெற முடியாமல்
தவித்த, அரசு பள்ளி மாணவிக்கு, காரைக்குடி மக்கள் மன்றத்தினர், 2.5 லட்சம்
ரூபாய் மதிப்பிலான சைக்கிளை வழங்கினர்.
சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம், ஸ்ரீதண்டாயுதபாணி அரசு உயர்நிலை பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார் குணமணி என்ற மாணவி. பெற்றோரை இழந்த ஏழை மாணவி குணமணி, எட்டாம் வகுப்பு படித்த போது, மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் முதலிடம் பிடித்தார்.
இப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் நாகராஜன், மாணவி குணமணியை, சைக்கிள் வீராங்கனையாக்க பயிற்சி அளித்து வருகிறார். தன் மகள் பவித்ராவை, சைக்கிள் வீராங்கனையாக உருவாக்கி, தேசிய அளவில் ஆறு விருது பெற வைத்தவர், நாகராஜன். இவரது பயிற்சியால், இரு ஆண்டுகளில், 20 தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளார்.
கேரளா, உத்தர பிரதேசம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த போட்டிகளில், குணமணி பங்கேற்றுள்ளார். மாநில போட்டியில் முதலிடம் பெற்றும், சிறந்த சைக்கிள் இல்லாததால், தேசிய அளவிலான போட்டியில், நான்காம், ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
உடற்கல்வி ஆசிரியர், தன்னிடம் உள்ள சைக்கிள் மற்றும் உதவிகளை செய்தும், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. இதையறிந்த காரைக்குடி மக்கள் மன்றத்தினர், நிதி திரட்டி, 2.5 லட்சம் விலையுள்ள சைக்கிளை, மாணவி குணமணிக்கு இலவசமாக கொடுத்தனர்.
பயிற்சியாளர், நாகராஜன் கூறியதாவது:
சாதிக்க திறமை இருந்தும், சைக்கிள் இல்லாததால், தேசிய அளவிலான போட்டியில், குணமணி பின்னடைவை சந்தித்தார். அதை மாற்றும் வகையில், மக்கள் மன்றத்தால் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இனி தேசிய அளவில் வெற்றி பெறுவார்; அதன் பின், மத்திய அரசின் விளையாட்டு விடுதியில் சேர வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறு கிடைத்தால், இந்தியாவுக்கான பதக்கங்களை பெற்று தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒவ்வொரு முறை போட்டிக்கு சென்று வரும் போதும், 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். செலவு குறித்து கவலைப்படுவதில்லை; நம்மால் ஒரு விளையாட்டு வீராங்கனை கிடைக்கிறார் என்ற பெருமையே போதும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...